வெள்ளி சிம்மாசனத்தில் சிறுபிள்ளை!
08-05-2026
1 இராஜாக்கள் 3:1–15
கிபியோனின் நள்ளிரவு நிசப்தம்! “உனக்கு வேண்டியதைக் கேள். நான் தருவேன்” என்று சர்வவல்லவர் ஒரு மானிடனுக்கு நீட்டும் எல்லையற்ற வாக்குத்தத்தம்! இப்படிப்பட்ட வாக்குத்தத்தத்திற்காக எத்தனையோபேர் ஏங்கும் நிலையில், ஒரு பேரரசன் எதைக் கேட்பான்? குவியும் செல்வத்தையா? சத்துருக்களின் சிரம் கொய்யும் பராக்கிரமத்தையா? ஆனால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் அசைக்கமுடியாத அதிகாரம் கொண்ட சக்கரவர்த்தி, சிருஷ்டிகரின் முன்னே மண்டியிட்டுத் தன்னை ஒன்றுமறியாத ஒரு ‘சிறுபிள்ளை’ என்று தாழ்த்துகிறான்! தன் சுய பலத்தால் இந்த மாபெரும் ராஜ்யத்தை ஆளமுடியாது என்ற அவனது ஆழமான சரணடைதலே, தேவனுடைய அளவற்ற கிருபையைத் திறக்கும் திறவுகோலானது. தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய தகுதியையோ, உலகத்துத் திறமையையோ அல்ல; அவர் கிருபையின் மீதான நமது முழுமையான சார்ந்திருத்தலை மட்டுமே! உலகத்தின் அரியணைகளில் நீ எவ்வளவு உயர்ந்து நின்றாலும், தேவ சந்நிதியில் நீ சிறுபிள்ளையாய் மண்டியிடும் அந்த நொடியே பரலோகத்தின் பொக்கிஷங்கள் உனக்காகத் திறக்கப்படும்!
ஜெபம்: சர்வஞானியே, என் சுயபுத்தியின்மேல் சாயாமல், உமது சித்தத்தைச் செய்யவும், என் சூழ்நிலைகளை நேர்த்தியாகக் கையாளவும் எனக்கு உம் ஞானத்தைத் தந்தருளும். ஆமென்.
