காலைத் தியானம் – மே 07, 2026

வியாழன்                            சிரம் கொய்த சுயபலம்

07-05-2026

1 இராஜாக்கள் 2:26–46

எருசலேம் எல்லையில் அரசநீதி! தாவீதை முன்பு கல்லெறிந்து சபித்த சீமேயிக்கு, சாலொமோன் அளித்தது ஒரு நிபந்தனையுடன் கொடுக்கப்பட்ட கிருபை. “எருசலேமை விட்டு வெளியேறினால் மரணம்!” இது பழைய உடன்படிக்கையின் நிழல்; மனிதனின் ஒரு சிறு சறுக்கலுக்காகவும் வாளை உருவும் நியாயப்பிரமாணம். மூன்று வருடங்கள் தன் சொந்த பலத்தால், ஒரு கைதியைப்போலத் தன் உயிரைக் காத்துக்கொண்டான் சீமேயி. ஆனால், தப்பியோடிய இரு அடிமைகளைத் தேடி அவன் சமாதான நகரத்தின் எல்லையைத் தாண்டினான். மறுகணமே, அவன் கொல்லப்படுகிறான். சாலொமோனின் சிம்மாசனம் மனிதனின் பரிபூரணக் கீழ்ப்படிதலை எதிர்பார்த்தது; ஆனால், கல்வாரிச் சிலுவையோ இயேசுவின் பரிபூரணப் பலியின்மேல் நமக்கு நிபந்தனையற்ற கிருபையை அருளுகிறது! சீமேயியைப் போல நம் சொந்த பலத்தால் பிரமாணத்தைக் காக்க முயன்றால் முடிவில் வீழ்ச்சியே மிஞ்சும். கிறிஸ்துவின் நிபந்தனையற்ற கிருபையிலிருந்து விலகி, சுயபலம் என்ற அடிமை நுகத்தடியைத் தேடி ஒருபோதும் ஓடாதே!

ஜெபம்: அன்பின் இயேசுவே, என் சொந்த முயற்சிகளில் சார்ந்திராமல், நீர் எனக்காகச் செய்துமுடித்த நிபந்தனையற்ற கிருபையில் என்றென்றும் இளைப்பாற எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.