செவ்வாய் மெய்யான ஞானம்!
12-05-2026
நீதிமொழிகள் 2:1–22
மனிதன் பொன்னையும் வெள்ளியையும் தேடி, பூமியின் ஆழத்தில் இருண்ட சுரங்கங்களில் தன் உயிரைப் பணயம் வைக்கிறான். என்னவொரு பரிதாபம் ! மண்ணில் புதைந்திருக்கும் உயிரற்ற உலோகத்துக்காக மூச்சுத் திணறத் தோண்டும் மனிதன், தன் ஆத்துமாவைக் காக்கும் நித்திய பொக்கிஷத்தை உதறித் தள்ளுகிறான். சாலொமோன் கண்ட ஞானத்தின் மூன்றாவது இரகசியம் இது தான்: “மெய்யான ஞானத்தைப் புதையலைப் போலத் தேட வேண்டும்”. உலகச் செல்வங்கள் உன் மாளிகையை அலங்கரிக்கலாம்; ஆனால், வஞ்சகரின் பசப்பு வார்த்தைகளிலிருந்தும், இச்சையின் மரண வலையிலிருந்தும் உன்னைத் தப்புவிக்க அவைகளால் ஒருக்காலும் முடியாது. தகிக்கும் பாவமும் வஞ்சகமும் உன்னை மாய்க்க வரும்போது, உன் கஜானாவில் தூங்கும் தங்கம் உன்னைக் காக்காது. அழியும் உலோகத்திற்காக இருளில் சாகசங்கள் செய்வதை விட, உன்னை மரணத்திலிருந்து மீட்கும் கிருபையாகிய கிறிஸ்துவுக்குள் ஆழமாய் வேரூன்றுவதே ஆகப்பெரிய ஞானம்!
ஜெபம்: கர்த்தாவே, அழியும் உலகச் செல்வங்களைத் தேடி என் ஜீவ நாட்களை வீணாக்காமல், என்னை மரண வலையிலிருந்து காக்கும் உமது ஞானத்தைப் புதையலைப்போலத் தேடுகிறேன். அழியா உம் ஞானத்தால் என்னை நிரப்பியருளும். ஆமென்.
