வெள்ளி இருதயத்தின் காவலாளி!
15-05-2026
நீதிமொழிகள் 4:1–27
உள்ளத்தின் அரண்! சாலொமோனின் ஞான உரை, ஒரு கோட்டையைக் காக்கும் தளபதியின் கட்டளையைப் போலத் தொனிக்கிறது. ஆனால் அது அவன் கண்டெடுத்த ஞானத்தின் ஆறாவது இரகசியம்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்” (வசனம் 23). மனிதன் தன் பொக்கிஷங்களைக் காக்கப் பல அடுக்குக் காவல்களைப் போடுகிறான்; தன் அந்தஸ்தைக் காக்கப் போராடுகிறான். ஆனால், தன் ஆத்துமாவின் ஊற்றான இருதயத்தை மட்டும் சத்துருவுக்குத் திறந்து வைத்துவிடுகிறான்! கோலியாத்தை வீழ்த்திய கரங்கள், ஒரு பெண்ணின் பார்வையில் வீழ்ந்ததே; அது கரங்களின் பலவீனமா? அல்ல, அது காவலில்லாத இருதயத்தின் வீழ்ச்சி! உன் கண்கள் காணும் காட்சிகள், உன் செவிகள் கேட்கும் சொற்கள், இவையெல்லாமே உன் இருதயக் கோட்டைக்குள் நுழையும் ரகசிய வழிகள். நீ காணும் ஒரு சிறு காட்சி, அங்கே பெரு நெருப்பைப் பற்றவைக்கலாம். உன் கண்களையும், செவிகளையும், நாவையும் நீயே ஆளவில்லை என்றால், அவை உன்னை அழிவின் பள்ளத்தாக்கில் தள்ளிவிடும்! உனது இருதயம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த பீடமாக இருக்கிறதா?
ஜெபம்: பரிசுத்த தேவனே, என் இருதயக் கோட்டைக்குள் சாத்தானின் அம்புகள் நுழையாதபடி, என் கண்களுக்கும் செவிகளுக்கும் நீரே காவலாளியாய் இரும். என் உள்ளம் உமது வார்த்தையால் மட்டுமே நிரம்பியிருக்க என்னைப் பரிசுத்தப்படுத்தும். ஆமென்.
