வியாழன் தகப்பனின் சிட்சை!
14-05-2026
நீதிமொழிகள் 3:11-12
சற்று நிகழ்காலத்திற்கு வருவோம்! இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், பிள்ளைகளை அடிக்காமல் வளர்க்க வேண்டும் என்ற சமுதாயத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதை நாம் பார்க்கிறோம். இது மனிதநேயம் மிக்க சரியான போதனைதான். ஆனால், இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்கும் பல பெற்றோர், அடுத்த எல்லைக்குச் சென்று, பிள்ளைகளின் தவறுகளைக் கண்டிக்கவே தயங்குகிறார்கள். ‘கண்டிக்கப்படாத வளர்ப்பு, முடிவில் கண்ணீரில் முடியும்’ என்பதைப் பல நேரங்களில் இந்த நவீன சமூகம் மறந்துவிடுகிறது.
இந்த முரண்பாட்டிற்கு நடுவேதான் சாலொமோன் கண்ட ஞானத்தின் ஐந்தாம் இரகசியம் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கிறது: “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே!” (வசனம் 11). மனிதன் எப்போதுமே திருத்தப்படுவதை வெறுக்கிறான்; தன் வழியே சரியென்று வாதாடுகிறான். உலகத்தில் தண்டனை என்பது ஒருவனை அழிப்பதற்காகவும் அவமானப்படுத்துவதற்காகவும் வழங்கப்படுகிறது. ஆனால், தேவனுடைய சிட்சையோ முற்றிலும் மாறுபட்டது! அது ஒரு நியாயாதிபதியின் கோபமல்ல; ஒரு தகப்பனின் பாசத் துடிதுடிப்பு! புதிய உடன்படிக்கையில், தேவன் நம்மை வியாதிகளாலோ விபத்துகளாலோ தண்டிப்பதில்லை; மாறாக, தம்முடைய வார்த்தையினாலும் ஆவியானவராலும் நம்மைத் திருத்தி வழிநடத்துகிறார். தேவனுடைய வார்த்தை உன்னை சிட்சிக்கும் போது, அதைச் சினமாக எண்ணி விலகாமல், உன்னைச் செதுக்க நீளும் தகப்பனின் அரவணைப்பாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடப்பதே ஞானத்தின் வழி!
ஜெபம்: அன்பின் தகப்பனே, என் சுயவழிகளை நியாயப்படுத்தாமல், என்னைச் செதுக்கும் உமது ஆவிக்குரிய சிட்சைக்கு என்னை முழுமையாய்க் கீழ்ப்படுத்துகிறேன். ஆமென்.
