சனி ஆலயத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டி!
23-05-2026
2 நாளாகமம் 5:1-10
பிரம்மாண்டத்தின் மடியில்! வனாந்தரத்து மணலிலும், யுத்தகளங்களிலும் பல நூற்றாண்டுகளாக அலைந்து திரிந்த உடன்படிக்கைப் பெட்டி, இதோ இப்பொழுது பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் கேருபீன்களின் செட்டைகளுக்குக் கீழே வைக்கப்பட்டது. தாவீது தன் முந்தைய பயணத்தில் கற்ற பாடத்தின்படி, தேவன் நியமித்த பரிசுத்த முறைப்படி அளவற்ற பலிகளோடும் மாபெரும் கொண்டாட்டத்தோடும் அப்பெட்டி கொண்டுவரப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆரோனின் துளிர்த்த கோலும், மன்னாவைக் கொண்ட பொற்கலசமும் இப்போது அங்கே இல்லை (வசனம் 10) என்று சரித்திரம் பதிவு செய்கிறது. மன்னா என்பது தேவனுடைய அன்றாட போஷிப்பின் சின்னம்; ஆரோனின் கோல் என்பது அவர் செய்த அற்புத அடையாளங்களின் சின்னம். காலங்கள் மாறும்போது இந்த அற்புதங்களும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களும் மறைந்துபோகலாம். ஆனால், அக்கினியின் நடுவே தேவன் தம் விரலால் வரைந்த அந்த வார்த்தைகள் மட்டுமே நித்திய காலமும் நிலைத்து நிற்கும்! நாம் பல நேரங்களில் தேவனிடமிருந்து வரும் அற்புதங்களையும், ஆசீர்வாதங்களையுமே தேடி ஓடுகிறோம்; ஆனால் தேவனோ தம்முடைய மாறாத வார்த்தையையே என்றென்றும் அஸ்திபாரமாக வைக்கிறார். தேவ வார்த்தையை உன் வாழ்வின் நிரந்தரப் பொக்கிஷமாகச் சுதந்தரித்திருக்கிறாயா?
ஜெபம்: சர்வவல்லவரே, ஆசீர்வாதங்களை விட, ஆசீர்வதிக்கும் உமது வார்த்தையையே என் வாழ்வின் நிரந்தரப் பொக்கிஷமாக நான் வைத்துள்ளேன். மாறாத உம் வாக்குகளுக்காக நன்றி. ஆமென்.
