காலைத் தியானம் – மே 29, 2026

வெள்ளி                        திறக்கப்படும் பரலோக வாசல்!

29-05-2026

2 நாளாகமம் 7:12–22

பிரம்மாண்டத்தின் நடுவே பெருங்கிருபை! எருசலேம் தேவாலயம் பொன்னால் ஜொலிக்கிறது; ஆனால் சர்வ வல்லவர் சாலொமோனிடம் அளிக்கும் மாபெரும் வாக்குத்தத்தம், அந்தப் பொன் மாளிகையைப் பற்றியதல்ல! மாறாக, பலவீனமான மனித இருதயங்களைப் பற்றியது. எப்பேர்ப்பட்ட சூழலிலும் மக்கள்  தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, தேவனுடைய முகத்தைத் தேடி வந்தால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களுடைய க்ஷேமத்தை மீட்டுத் தருவார் (வசனம் 14). ஒரு தேசத்தை உலுக்கும் மாபெரும் அழிவுகளுக்குப் பரிகாரம், சிம்மாசனத்தின் வாள்வீச்சிலோ கருவூலத்தின் தங்கத்திலோ இல்லை; அது உடைந்த மனிதர்களின் முழங்கால்களில் ஒளிந்திருக்கிறது! அழிவின் விளிம்பில் தவிக்கும் மனிதனை மீட்க, தேவன் எதிர்பார்ப்பது அவனது தகுதியையோ ஐசுவரியத்தையோ அல்ல; தன்னைத்  தாழ்த்தும் சரணடைதலை மட்டுமே! உனது வாழ்வோ, குடும்பமோ இன்று வறண்டுபோய் நம்பிக்கையற்று நிற்கிறதா? உன் தேசத்தின் ஆவிக்குரிய சறுக்கல் உன்னைக் கவலையடையச் செய்கிறதா? கலங்காதே! உன் விடுதலையும், உன் தேசத்தின் வெற்றியும் உன் முழங்கால்களில் உள்ளது! பரலோகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு உன்னைக் குணமாக்கும் கிருபை மழையாய் இறங்கிவரும்!

ஜெபம்: கிருபை நிறைந்தவரே, இன்றும் நீர் நிறைவேற்றும் இந்த வாக்குத்தத்தத்திற்காய் நன்றி. இதோ, என்னைத் தாழ்த்தி முழங்காலில் வருகிறேன்; பரலோகத்தைத் திறந்து என்னையும் என் சூழ்நிலைகளையும் முற்றிலுமாய்க் குணமாக்கியருளும். ஆமென்.