வெள்ளி முடிக்கப்பட்ட பணி!
22-05-2026
1 இராஜாக்கள் 7:40–51
நிறைவேறிய மாபெரும் திட்டம்! எருசலேமின் பிரம்மாண்டமான தேவாலயப் பணிகள் முற்றிலுமாக நிறைவடைகின்றன! அதிலுள்ள ஒவ்வொரு நுணுக்கமும், வரப்போகும் கல்வாரிச் சிலுவையின் ஈடில்லா நிழலாட்டமாகவே செதுக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ‘பித்தளை’ என்பது எப்போதுமே பாவத்திற்கான ‘நியாயத்தீர்ப்பைக்’ (Judgement) குறிக்கும் உலோகமாகும். சாலொமோன் கட்டிய இந்த ஆலயத்தில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. பித்தளைப் பணிமுட்டுகள் மகா திரளாயிருந்தபடியால், அவைகளின் எடை கணக்கிடப்படவே இல்லை! நம் பாவங்களுக்காக இயேசு கல்வாரிச் சிலுவையில் தம்மீது ஏற்றுக்கொண்ட நியாயத்தீர்ப்பின் எடையை, பிரபஞ்சத்தின் எந்தத் தராசிலும் அளக்க முடியாது. நீ செய்த குற்றங்கள் ஒருவேளை மலையளவாக இருக்கலாம்; ஆனால், உன்னை மீட்பதற்காக அவர் கொடுத்த கிரயமோ உலகளவானது! உன்னை மீட்க, சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தேவன் தீட்டிய இந்தப் பிரம்மாண்டமான திட்டத்தைக் கண்டுகளிக்க உன் மனக்கண்கள் திறக்கப்படுவதாக!
ஜெபம்: கிருபை நிறைந்தவரே, பாவியாகிய என்னை மீட்க நீர் தீட்டிய பிரம்மாண்டமான மீட்பின் திட்டத்தைக் கண்டு என் உள்ளம் வியக்கிறது. என் குற்றங்களை விடப் பெரியதான உமது ஈடில்லாத் தியாகத்திற்காக உமக்கே துதி, கனம், மகிமை என்றென்றும் செலுத்துகிறேன். ஆமென்.
