காலைத் தியானம் – மே 09, 2026

சனி                                            நீதியில் ஞானம் 

09-05-2026

1 இராஜாக்கள் 3:16–28; 4:20–34

உருவிய மரண வாள்! நியாயாசனத்தின் முன்னே சாட்சிகளற்ற ஒரு விசித்திர வழக்கு! உரிமை கொண்டாடும் இருவர்; உயிருள்ள ஒற்றைக் குழந்தை. அரியணையில் அமர்ந்திருக்கும் சக்கரவர்த்தி சட்டப்புத்தகங்களைப் புரட்டவில்லை; மாறாக மரண வாளை உருவக் கட்டளையிடுகிறான்! உயிருள்ள பிள்ளையை இரண்டாகப் பிளந்து ஆளுக்கொரு பாதி கொடுக்க ஆணையிடுகிறான். சபையோர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வாள் ஓங்கப்படுகிறது. அப்போது வெளிப்படுகிறது மெய்யான தாய்மை! தன்  உரிமை பறிபோனாலும் சரி, பிள்ளை பிழைக்கட்டும், என்று தன் நெஞ்சைப் பிளந்து கதறுகிறாள் அசல் தாய். ஓங்கிய வாள் குழந்தையின் உடலைப் பிளக்கவில்லை; பொய்க்கும் மெய்க்கும் இடையிலான திரையைக் கிழித்து சத்தியத்தை வெளிப்படுத்தியது. தேவனுடைய ஞானம் என்பது வெறும் உலகத் தர்க்கமல்ல; அது மனித இருதயத்தின் அந்தரங்கங்களை ஊடுருவிப் பார்க்கும் வல்லமை கொண்டது. சட்டம் நியாயத்தைக் கேட்கும்; ஞானமோ மெய்யான அன்பை அடையாளம் காணும். வெளித்தோற்றத்தைக் கண்டு ஒருபோதும் மயங்காதே; தேவ ஞானம் மட்டுமே மனித இருதயத்தின் ஆழங்களை வாளின்றிப் பிளக்கும் வல்லமை கொண்டது!

ஜெபம்: தேவனே, என் வாழ்வில் எழும் சிக்கலான சூழ்நிலைகளில், வெளித்தோற்றத்தைக் கண்டு மயங்காமல் உண்மையை அறியும் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.