காலைத் தியானம் – செப்டம்பர் 06, 2026

ஞாயிறு                           நெருக்கடியில் வெளிப்படும் நம்பிக்கை

06-09-2026

2 நாளாகமம் 28:16–27

நெருக்கடி ஆகாஸை தேவனிடம் திருப்பவில்லை; அவன் ஏற்கெனவே நம்பிய தவறான திசையையே இன்னும் தீவிரமாகப் பிடித்தான். அசீரிய உதவி அவனை வலுப்படுத்தவில்லை. இருந்தும், தன்னைத் தோற்கடித்த சீரியரின் தெய்வங்களே அவர்களுக்கு வெற்றி தந்ததாக எண்ணி அவற்றை நாடினான். 

நெருக்கடி எப்போதும் ஒருவரைத் தானாகவே தேவனுக்கு சமீபப்படுத்தாது; அது நாம் உள்ளுக்குள் எதை நம்புகிறோம் என்பதை வெளிக்கொண்டு வரும். ஆகையால் நாம் மனித உதவி அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்பது பொருளல்ல. தேவன் மருத்துவர், நண்பர், ஆலோசகர், அதிகாரி, சமூக ஆதரவு ஆகியவற்றின் மூலம் உதவலாம். இதை அறிந்த நமக்கு ஒரு கேள்வி: அவற்றை நம் இரட்சகராக மாற்றுகிறோமா? உதவிகளைப் பயன்படுத்தலாம்; நம்பிக்கையின் சிம்மாசனத்தை அந்த உதவிகளுக்குக் கொடுத்துவிடக் கூடாது. ஆகாஸ் செய்த தவறு உதவி கேட்டது மட்டுமல்ல; தேவனை விட்டுவிட்டு, வேறு பாதுகாப்பைத் தன் இறுதி நம்பிக்கையாக எடுத்துக்கொண்டதே. நெருக்கடி உன் நம்பிக்கையின் மையம் வேறிடத்தில் இருப்பதை வெளிப்படுத்தினால்,  அதை, உன்னையே நீ திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்.

ஜெபம்: கர்த்தாவே, சோதனையின் நாட்களில் நீர் தரும் மனித உதவிகளை நன்றியோடு ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உமது இடத்தில் வைக்காமல், என் இறுதி நம்பிக்கையை உம்மில் நிலைநிறுத்தவும் எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.