செவ்வாய் ‘நாங்கள்’ என்ற ஒரு வார்த்தை
17-11-2026
எஸ்றா 9:1–15
எஸ்றா எருசலேமுக்கு வந்தபோது அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. மக்களும் தலைவர்களும் அந்நிய தெய்வங்களை வழிபட்ட சமூகங்களோடு மணஉறவு கொண்டு, உடன்படிக்கையின் பரிசுத்தத்தைக் குலைத்திருந்தார்கள். இது இன வேறுபாடு பற்றியதல்ல; தேவனுக்கான விசுவாசம் பற்றியது. இதைக் கேட்ட எஸ்றா, தவறு செய்தவர்களை உடனே மேடையேற்றி அவமானப்படுத்தவில்லை. தன் வஸ்திரத்தைக் கிழித்து, மாலைப் பலியின்போது தேவ சமுகத்தில் நொறுங்கி அமர்ந்தான். தன் ஜெபத்தில் ‘அவர்கள்’ என்று தள்ளிவைக்காமல் ‘நாங்கள்’ என்று அறிக்கை செய்தான். சிறையிருப்பிற்குப் பின் தேவன் அளித்த கிருபையை மறந்த சமூகத்தின் வீழ்ச்சியைத் தன் பாரமாகவே சுமந்தான்.
நம் குடும்பத்திலோ சபையிலோ தவறு வெளிப்படும்போது, உடனே பிறரைத் தனிமைப்படுத்தித் தீர்ப்பிடுவது எளிது. ஆனால் அந்தத் தவறு வளர நம் சூழலும் அசதியும் எவ்வாறு இடமளித்தன என்று நிதானிப்பதும் அவசியம். பழி சுமத்தும் விரலைவிட, சமூகத்தின் காயத்தைத் தன் பாரமாக ஏற்றுத் தேவ சமுகத்தில் மன்றாடும் இதயமே உண்மையான மனந்திரும்புதலுக்கு வழிகாட்டும். நம் அக்கிரமங்களுக்குத் தக்கதாகத் தண்டியாமல் கிருபை பாராட்டும் நீதியுள்ள தேவனே, நொறுங்குண்ட சமூகத்தை மீண்டும் நிலைநிறுத்துவார்.
ஜெபம்: தேவனே, பிறரின் தவறைக் காணும்போது தீர்ப்பிடும் அவசரத்தைவிட, பரிந்துபேசும் தாழ்மையையும் பொறுப்புணர்வையும் எனக்குத் தாரும். ஆமென்.
