காலைத் தியானம் – மே 10, 2021

யோபு 36: 5 – 15                 

உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கச் செய்கிறார்                 

ஆம், கர்த்தர் நீதிமானைப் புறக்கணிக்க மாட்டார். யோபு, கர்த்தர் தன்னைக் கவனிக்கவில்லை; தன்னுடைய கூப்பிடுதலுக்குச் செவிசாய்க்கவில்லை என்று நினைத்தான். கர்த்தருடைய கண்களோ தனக்குப் பிரியமானவர்களின் மேலிருந்து விலகுவதில்லை.  அது மாத்திரமல்ல, அவர் நீதிமான்களை உயர்ந்த இடங்களுக்குக் கொண்டு போகிறார். முதலாவதாக, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக்கப் பட்டிருக்கிறாயா? உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லையென்றால், உன் பாவக் கறை கழுவப்படாவிட்டால், நீ நீதிமானாக முடியாது. நீ கர்த்தருக்கு முன் நீதிமானாக இருந்தால், தற்காலிக தடங்கல்களைச் சந்தித்தாலும், உயர்த்தப்படுவது நிச்சயம். கர்த்தர் உன்னை ராஜாக்களோடே சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த இடங்களில் உட்காரவும் வைப்பது உன்னை மகிமைப் படுத்துவதற்காக அல்ல. நீ கர்த்தரை மகிமைப் படுத்தவேண்டும் என்பதற்காக.

ஜெபம்

ஆண்டவரே, எங்கோ இருந்த என்னை இப்படி உயர்த்தியிருக்கிறீர். நான் இன்று உம்மை மகிமைப் படுத்தும்படி என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குக் காண்பியும். ஆமென்.