ஞாயிறு பெற்றோரின் விசுவாசம் போதாது
27-09-2026
2 இராஜாக்கள் 21:1–18
மனாசே பன்னிரண்டு வயதில் அரியணை ஏறினான். அவன் தகப்பன் எசேக்கியா, தேவனைத் தேடி, விக்கிரகங்களை அகற்றி, யூதாவை மீண்டும் கர்த்தரிடத்தில் திருப்பியவன். ஆனால் தகப்பனின் விசுவாசம் மகனுக்கு தானாகக் கடத்தப்படவில்லை. மனாசே, எசேக்கியா அகற்றிய மேடைகளை மீண்டும் கட்டி, விக்கிரக ஆராதனையை மீட்டெடுத்து, கர்த்தருடைய ஆலயத்திற்குள்ளேயே அந்நிய பலிபீடங்களை அமைத்தான்.
ஒருவர் கேரேஜில் இருப்பதால் கார் ஆகமாட்டார்; அதுபோல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினாலோ, தேவாலையத்திற்குத் தவறாமல் செல்வதினால் மட்டுமோ ஒருவர் கிறிஸ்தவராகிவிடமாட்டார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்; ஆனால் இயேசு சொன்னபடி நாம் “மறுபடியும் பிறக்க வேண்டும்” (யோவான் 3:3).
பெற்றோரின் ஜெபம் உன்னை ஆசீர்வதிக்கலாம். சபை உனக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கலாம். வேதாகமம் வாசித்த குடும்பத்தில் நீ வளர்ந்திருக்கலாம். ஆராதனைகளிலும் பாரம்பரியங்களிலும் பல ஆண்டுகள் பங்கேற்றிருக்கலாம். ஆனால் இவை எதுவும் கிறிஸ்துவின்மேல் தனிப்பட்ட விசுவாசத்திற்கு மாற்றாக இருக்க முடியாது. கிறிஸ்தவ விசுவாசத்தில் “பேரப்பிள்ளைகள்” இல்லை; கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள் (யோவான் 1:12–13). உன் பெற்றோர் இயேசுவை அறிந்திருக்கிறார்களா என்பது மட்டும் கேள்வி அல்ல. நீ அவரை அறிந்திருக்கிறாயா? அவர் உன் ஆண்டவரா? உன் நம்பிக்கை குடும்ப மரபிலா, அல்லது உயிருள்ள கிறிஸ்துவிலா?
ஜெபம்: இயேசுவே, உம்மை தனிப்பட்ட முறையில் அறிந்து, விசுவாசித்து, உமக்குச் சொந்தமானவனா(ளா)க வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். என் குடும்பத்தின் விசுவாசம் மட்டும் அல்ல, என் சொந்த வாழ்வும் உம்மை ஆண்டவர் என்று அறிக்கையிடட்டும். ஆமென்.
