திங்கள் அரச முத்திரை பெற்ற வெறுப்பு
09-11-2026
எஸ்தர் 3:1–15
மொர்தெகாய் தலைவணங்க மறுத்தபோது, ஆமானின் ஆணவம் ஓர் இனத்தையே அழிக்கத் துணிந்தது. தேவ மக்களின் தனித்துவமான விசுவாசத்தை, தேசத்திற்கு எதிரான ஆபத்தாக அரசனிடம் திரித்துக் கூறினான். பாதி உண்மையையும் முழு வெறுப்பையும் கலந்து, அழிவுக்கான அரசாணையைப் பெற்றான். சூசான் நகரம் கலங்கியபோது, அரசனும் ஆமானும் குடிக்க அமர்ந்தனர். அதிகாரம் மனசாட்சியை இழக்கும்போது, கொடுமை சாதாரண நிர்வாக முடிவாகிவிடும். அரச முத்திரை அநீதியை நியாயமாக்கவில்லை; அதன் கொடூரத்தையே பெரிதாக்கியது.
நாமும் ஒருவரிடம் ஏற்படும் கசப்பை அவருடைய குடும்பம், மொழி, சமூகத்தின்மீது பரப்புகிறோமா? ‘அவர்களெல்லாம் இப்படித்தான்’ என்ற முன்தீர்ப்பு நீதியின் பார்வையை மங்கச்செய்கிறது. நிந்தையும் வெறுப்பும் அதிகார முத்திரை பெற்று நம்மைக் கலங்கடிக்கும் நேரங்களும் உண்டு. ஆனாலும், ஆமான் குறித்த நாளும் கர்த்தரின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்தது. மனித வெறுப்பு தன் திட்டங்களை எழுதினாலும், இறுதித் தீர்ப்பை எழுதுபவர் நம் தேவனே.
ஜெபம்: நீதியின் தேவனே, என் இருதயத்தில் பாகுபாட்டின் விதைகள் முளைக்காதபடி காத்தருளும். அநீதி அதிகாரம் செலுத்தும் நேரங்களிலும் உமது ஆளுகையை நம்பச் செய்தருளும். ஆமென்.
