திங்கள் பரிசுத்தத்தின் பெயரில் ஒரு பொறி
23-11-2026
நெகேமியா 6:1–19
மதில் பணி முடிவை நெருங்கியபோது எதிரிகள் தங்கள் தந்திரத்தை மாற்றினர். நேரடித் தாக்குதல் தோற்றதால், முதலில் நட்புப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்; பின்பு அவதூறு பரப்பினர்; இறுதியாகத் தீர்க்கதரிசனத்தின் போர்வையில் பயமுறுத்தினர். உயிரைக் காத்துக்கொள்ள ஆலயத்தின் உள்ளே ஒளிந்துகொள்ளும்படி செமாயா கூறியபோது, நெகேமியா அந்தச் சதியை நிதானித்தான். ஆசாரியன் அல்லாத தான் ஆலயத்திற்குள் ஒளிவது தேவ பிரமாணத்தை மீறும் பாவம் என்பதை அறிந்தான். பயத்தினால் தேவ ஒழுங்கை மீற மறுத்து, “தேவனே, என் கைகளைப் பெலப்படுத்தும்” என்று ஜெபித்துப் பணியைத் தொடர்ந்தான். ஐம்பத்திரண்டு நாட்களில் மதில் கட்டி முடிக்கப்பட்டபோது, இந்தக் கிரியை தேவனால் கைகூடிவந்தது என்பதைப் பகைவர்களும் உணர்ந்து சோர்ந்துபோனார்கள்.
இன்றும் பயத்தை விதைத்து, ‘தேவன் சொன்னார்’ என்று அவசர முடிவுக்குத் தள்ளும் குரல்கள் எழலாம். ஆவிக்குரிய போர்வையில் வரும் எந்த ஆலோசனையும் வேத சத்தியத்திற்கு உட்பட்டதா என்று நிதானிப்போம். தேவன் ஒருபோதும் தமது வார்த்தைக்கு முரணாக நம்மை வழிநடத்துவதில்லை. பயத்தின் மிரட்டலுக்கு அடிபணியாமல், வேத சத்தியத்தின் வெளிச்சத்திலும் தேவ பெலத்திலும் நிலைத்திருப்பவர்களே அழைப்பின் பணியை நிறைவேற்றுவார்கள்.
ஜெபம்: தேவனே, பயம் என் தீர்மானத்தை ஆளாதபடி காத்தருளும். உமது வார்த்தையின் வெளிச்சத்தில் ஒவ்வொரு ஆலோசனையையும் சோதிக்கும் ஞானத்தைத் தாரும். ஆமென்.
