காலைத் தியானம் – மே 28, 2022

மாற்கு 14: 12 – 21

உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்      

                        யூதாஸ்காரியோத்து என்ற பெயரைக் கேட்டவுடன் அவன் ஆரம்பத்திலிருந்தே ஒரு வில்லன் என்ற எண்ணம் தான் நமக்கு வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல. யூதாஸ் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் தெரிந்துகொள்ளப்பட்ட 12 சீடர்களில் ஒருவன். எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு இந்த ஊழியத்தில் பங்கு பெற்றவனாய் இருந்தான் என்று பேதுரு யூதாசைக் குறித்து அப்போஸ்தலர் 1:17ல் கூறுகிறார். யூதாஸ் இயேசுவோடு நெருங்கிப் பழகி, அவரோடு அப்பம் புசித்த அவருடைய சீடன். சீடர்களுடைய பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்தவன். ஆனால் அவனுக்குள் சாத்தான் புகுந்தபோது இயேசுவைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்து விட்டான். நாமும் உத்தமக் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். சாத்தான் நம்மை விழத்தட்ட சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அதிகக் கவனமாய் விழித்திருக்க வேண்டும். விழித்திருந்து ஜெபம் பண்ணுவோமாக.    

ஜெபம்:

ஆண்டவரே, நான் உத்தமக் கிறிஸ்தவன் என்ற மெத்தனம் வந்துவிடாமல் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம் பண்ண உதவி செய்யும். ஆமென்.