காலைத் தியானம் – ஜூலை 19, 2026

ஞாயிறு                            குஷ்டரோகிகளின் நற்செய்தி!

19-07-2026

2 இராஜாக்கள் 7:3-20

மரணம் சூழ்ந்த தேசத்தில், சமூகத்தால் குப்பைமேட்டிற்கு வீசப்பட்ட நான்கு குஷ்டரோகிகள்! ஒரு பட்டணத்தின் தலையெழுத்தை மாற்ற, சர்வவல்லவர் தேர்ந்தெடுத்தது சிம்மாசனங்களையோ, பராக்கிரமசாலிகளையோ அல்ல; இந்த ஆதரவற்ற நோயாளிகளைத்தான். செத்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து அவர்கள் இருளில் எடுத்துவைத்த அந்தப் பலவீனமான காலடிச் சத்தங்களைத்தான், மாபெரும் ரதங்களின் ஓசையாகச் சத்துருக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்தார் தேவன். எந்தச் சமூகம் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என ஊருக்கு வெளியே துரத்தியதோ, அதே சமூகம் இவர்களது நற்செய்தியைக் கொண்டாடுகிறது! பலவீனர்களைக் கொண்டே பலவான்களை வெட்கப்படுத்தும் பரலோகத்தின் வியூகம் இது.

உங்கள் பலவீனத்தையோ, சமூகம் உங்களை ஒதுக்கி வைத்திருப்பதையோ எண்ணி ஒருபோதும் சோர்ந்துபோகாதீர்கள். உங்களிடம் எஞ்சியிருக்கும் அந்தச் சிறிய நம்பிக்கையோடு துணிந்து முன்னேறுங்கள். உங்கள் பலவீனமான காலடிகளை நீங்கள் தேவனுக்காக எடுத்துவைக்கும்போது, அதைப் பரலோகத்தின் போர்க்கூச்சலாய் மாற்றிப் பகைவர்களைத் துரத்த அவரால் முடியும்!

ஜெபம்: கர்த்தாவே, என் பலவீனங்களைக் கண்டு நான் சோர்ந்துபோகாமல், உமக்காகத் துணிந்து விசுவாச அடிகளை எடுத்துவைக்க எனக்குப் பெலன் தாரும். என்னையும், உமது மாபெரும் விடுதலையின் கருவியாக மாற்றிப் பயன்படுத்தியருளும். ஆமென்.