காலைத் தியானம் – டிசம்பர் 06, 2020

யோபு 30: 1 – 31

இப்போது நான் பாட்டும் பழமொழியும் ஆனேன்   

29ம் அதிகாரத்தில் கடந்த கால நன்மைகளையும் சமுதாயத்தில் தனக்கிருந்த பெருமைகளையும் விவரித்துக் கொண்டிருந்த யோபு இப்போது நிகழ்கால பாடுகளைப் பற்றி பேசுகிறான். மரியாதை இருந்த இடத்தில் இகழ்ச்சியும் கிண்டலும்தான் இருந்தன. கர்த்தருடைய ஆசீர்வாதம் தன்னைவிட்டு விலகிப் போய்விட்டதாக அவன் உணர்ந்தான்.  ஊருக்கெல்லாம் உதவி செய்த அவனுக்கு இப்போது உதவி செய்ய யாருமில்லை. மற்றவர்களுக்கு ஆறுதலாயிருந்த அவனுக்கு இப்போது ஆறுதல் தேவைப்பட்டது. நமக்குக் கூட சில சமயங்களில் அவமானப்படும் தருணங்கள் ஏற்படலாம். செய்யாத தவறுக்கு நாம் குற்றப்படுத்தப்படலாம்.  அந்த நாட்களிலும் யோபுவைப் போல கர்த்தரை மாத்திரம் நோக்கிக் கூப்பிடு (வசனம் 20). ஒருவேளை அந்த நாட்கள், கர்த்தர் உன்னைப் பிற்காலத்தில் உபயோகிக்கப் போகும் மகிமையான ஊழியத்திற்கு உன்னை ஆயத்தப்படுத்தும் நாட்களாக இருக்கலாம்.                                   

ஜெபம்

ஆண்டவரே, அவமானத்தைப் பொறுத்துக் கொள்ளும் மனத்தாழ்மையையும், உம்மைப் பிடித்துக் கொள்ளும் மன உறுதியையும் எனக்குத் தாரும். ஆமென்.