காலைத் தியானம் – டிசம்பர் 30, 2020

சங் 150: 1 – 6          

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக            

கர்த்தருடைய படைப்புகள் அனைத்தும் கர்த்தரைத் துதிக்கின்றன.  கர்த்தருடைய படைப்புகளிலேயே மிகவும் உயர்ந்த நிலையிலிருக்கும் மனிதராகிய நமக்கும் கர்த்தரைத் துதிப்பதைவிட சிறந்த காரியம் வேறென்ன இருக்க முடியும்! கர்த்தர் நமக்கு இன்றும் சுவாசம் தந்திருக்கிறார். அதற்காக அவரைத் துதிப்போமாக. கர்த்தர் நல்லவர். என்றும் மாறாதவர். இரக்கம் மிகுந்தவர். அவருடைய அன்புக்கு அளவேயில்லை. அவர் நீதியுள்ளவர். அவர் நீடிய பொறுமையுள்ளவர். அவர் பரிசுத்தர். அவர் தம்முடைய உயிரைக் கொடுத்து உன்னையும் என்னையும் மீட்டு, பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்களாக்கி விட்டார். இவை அனைத்துக்காகவும்  கர்த்தரைத் துதிப்போமாக. மேலும் இந்த பூலோக வாழ்க்கையில் நமக்காக அவர் கொடுத்துள்ள எண்ணிலடங்காத நன்மைகளுக்காகவும் அவரைத் துதிப்போமாக. அவர் கொடுத்துள்ள குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் அவரைத் துதிப்போமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு அனுதினமும் புத்துயிர் கொடுக்கும் கர்த்தருடைய வார்த்தைக்காக அவரைத் துதிப்போமாக.                  

ஜெபம்

ஆண்டவரே, பூலோகத்தார் அனைவரோடும் சேர்ந்து உம்மைத் துதிக்கும் பாக்கியத்துக்காக நன்றி சுவாமி. ஆமென்.