காலைத் தியானம் – ஏப்ரல் 09, 2022

மாற்கு 3: 13- 22

மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக் கொள்ளும்படி வந்தார்கள் 

                             இயேசுவின் குடும்பத்தாருக்கு (இனத்தாருக்கு) அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இவர் ஏன் எல்லாரையும் போல ஒரு நல்ல (சாதாரண) வாழ்க்கை வாழக் கூடாது? பிதாவாகிய தேவனுடைய வேலையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தச்சுத் தொழிலை விட்டுவிட்டாரே! ஏன் அப்படிச் செய்தார்? தொழிலையும் தேவனுடைய ஊழியத்தையும் சேர்த்தே செய்திருக்கலாமே! தலை சாய்க்க இடமில்லாமல், ஊர் ஊராச் சுற்றித் திரியும் பிரசங்கியாகிவிட்டாரே. வீட்டில் இருந்துகொண்டே பிரசங்கம் பண்ணியிருக்கலாமே! அவருடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்கென்று சில மனிதர்களைச் சேர்த்துக் கொண்டாரே, அவர்களாவது நன்றாக படித்தவர்களாக அல்லது பணக்காரர்களாக இருந்திருக்கலாமே! இதெல்லாம் போதாதென்று, இவர் பல அற்புதங்களைச் செய்கிறார் என்று சொல்லிக்கொண்டு,  ஏராளமான மக்கள் இவரைச் சாப்பிடக்கூடவிடாமல் சூழ்ந்துகொள்ளுகிறார்களே! இயேசுவின் வித்தியாசமான மற்றும் துணிச்சலான வாழ்க்கை, குடும்பத்தினருக்கே விசித்திரமாகத் தோன்றியது. நீ ஆண்டவருக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் உன் சுகமான (சாதாரண) வாழ்க்கையை விட்டு வெளியே வர தயராக இருக்கிறாயா?

ஜெபம்:

ஆண்டவரே, உலகம் என்னைப் பைத்தியம் என்று நினைத்தாலும், நீர் சொல்வதையே செய்யும் துணிச்சலை எனக்குத் தாரும். ஆமென்.