காலைத் தியானம் – ஏப்ரல் 15, 2022

பெரிய வெள்ளி

யோவான் 19: 1 – 16    

பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப் படாதிருந்தால்

                             யூத மதத்தலைவர்களுக்கு இயேசுவின் வழிகள் தலைகீழாகத் தோன்றியது. தங்களுடைய அதிகாரத்தையும் சமூக அந்தஸ்தையும் அவர் கெடுக்கிறார் என்று நினைத்தார்கள். மேலும் இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்கள். ஆனால் மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் யூத மதத்தலைவர்களுக்குக் கிடையாது என்பதால் இயேசு பிலாத்துவிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். ஒரு கேள்விக்கு இயேசு பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தபோது, பிலாத்து கோபமடைந்து இயேசுவைச் சிலுவையில் அறைய தனக்கு அதிகாரமுண்டு என்று சொல்லுகிறான். அந்த சம்யத்தில் இயேசு ஒரு மாபெரும் உண்மையை வெளிப்படுத்துகிறார். பரத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டால் பிலாத்துவுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதே அந்த உண்மை. நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு நாம் பயப்படவேண்டியதில்லை. உன் பரம பிதாவின் அனுமதியில்லாமல் எதுவும் நடக்கவில்லை என்பதை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்.

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய அனுமதியில்லாமல் நான் எந்த துன்பத்தையும் அநியாயத்தையும் எதிர்கொள்வதில்லை என்று நினைவுபடுத்தியதற்காக நன்றி. ஆமென்.