காலைத் தியானம் – ஆகஸ்ட் 28, 2026

வெள்ளி விலை கேட்கும் சிம்மாசனமும் விலை கொடுத்த ராஜாவும்!

28-08-2026

2 இராஜாக்கள் 15:8–22

இஸ்ரவேலின் சிம்மாசனம் இரத்தத்தால் கறைபடுகிறது! சகரியா கொல்லப்படுகிறான்; அவனைக் கொன்ற சல்லூமும் ஒரே மாதத்திற்குள் மெனாகேமால் வெட்டி வீழ்த்தப்படுகிறான். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொடங்கிய வன்முறை, அப்பாவி மக்கள்மீதும் பாய்கிறது. மெனாகேமின் ஒரே நோக்கம், எப்படியாவது தனது சிம்மாசனத்தைக் காப்பாற்றிக்கொள்வது. அதற்காக மற்றவர்களின் உயிரும், கண்ணீரும், செல்வமும் விலையாகச் செலுத்தப்பட்டன. அவன் அதிகாரத்தை அனுபவித்தான்; ஆனால் அதன் விலையை மக்கள் சுமந்தார்கள். பாவத்தால் ஆளப்படும் மனித இருதயம் இப்படித்தான் செயல்படுகிறது: தன்னைப் பாதுகாக்கவும், தனது விருப்பத்தை நிறைவேற்றவும், பிறரைப் பயன்படுத்தவும் காயப்படுத்தவும் அது தயங்குவதில்லை. 

ஆனால் இயேசு கிறிஸ்துவின் அரசாட்சி முற்றிலும் வேறுபட்டது. இயேசு தமது மக்களை மீட்பதற்காகத் தம்மையே பலியாகக் கொடுத்தார். அவர் நம்மிடமிருந்து இரத்தத்தைக் கோரவில்லை; சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தினார். நாம் செலுத்த முடியாத பாவத்தின் விலையை அவர் தாமே செலுத்தி, நம்மைத் தமது கிருபையின் ராஜ்யத்திற்குள் அழைத்தார். இயேசுவின் பாதையில் நடப்போம்.

ஜெபம்: இயேசுவே, நான் செலுத்த வேண்டிய பாவத்தின் விலையைச் சிலுவையில் நீரே செலுத்தியதற்காக நன்றி. உம்மைப்போலத் தாழ்மையோடு பிறருக்குச் சேவைசெய்யவும், அவர்களின் சுமைகளைச் சுமக்கவும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.