ஞாயிறு மறைக்கப்படாத பெயர்கள்
29-11-2026
அட்வெந்து – Advent
எருசலேமின் மதில்கள் மீண்டும் எழுந்தன. ஆலயத்தில் துதி ஒலித்தது. ஆனால் தாவீதின் சிங்காசனம் காலியாகவே இருந்தது. கர்த்தருடைய நாளையும், அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் தூதனையும் முன்னறிவித்த மல்கியாவுடன் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனக் குரல் ஓய்ந்தது. பின்னர் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள். பாரசீகப் பேரரசு வீழ்ந்தது. கிரேக்கர் எழுந்தனர். தாலமியரும் செலூக்கியரும் ஆட்சி செய்தனர். மக்கபேயர் போராடினர். அஸ்மோனேயர் ஆட்சி மலர்ந்தது. இறுதியில் ரோமரின் இரும்புக்கரம் யூதேயாவை ஆட்கொண்டது. அரசர்கள் மாறினர். பேரரசுகள் சரிந்தன. தலைமுறைகள் மறைந்தன. ஆனால் ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் தேவன் அளித்த வாக்குத்தத்தம் மறையவில்லை. தீர்க்கதரிசன மௌனத்தின் நீண்ட இரவில், தேவனுடைய மீட்பின் திட்டம் நிறைவேறும் நேரத்தை நோக்கி வரலாறு நகர்ந்தது. இறுதியில் பெத்லகேமின் எளிய முன்னணையில், பேரரசுகளின் முழக்கங்களைவிட மகத்தான ஓர் ஒலி எழுந்தது—ஒரு பரிசுத்தக் குழந்தையின் முதல் அழுகை! நானூறு ஆண்டுகளின் மௌனத்தை அந்த மழலையின் குரல் கலைத்தது; காலங்காலமாகக் காத்திருந்த வாக்குத்தத்தம், இயேசு கிறிஸ்துவில் மனித உருவம் பெற்றது!
மத்தேயு 1:1–6
மத்தேயு தனது சுவிசேஷத்தைத் தொழுவத்தில் தொடங்கவில்லை. பெயர்களில் தொடங்குகிறான். ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை நீளும் வரிசையில் எதிர்பாராத பெண்களின் கதைகள் பதிந்துள்ளன. தாமார். ராகாப். ரூத். இறுதியில் உரியாவின் மனைவி. இப்பெயர்கள் அனைத்தும் எளிமையான குடும்ப வரலாறுகளைக் குறிக்கவில்லை. ராகாபும் ரூத்தும் இஸ்ரவேலுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். உரியாவின் மனைவி என்ற குறிப்பில் தாவீதின் தவறும் மறைக்கப்படவில்லை. சுவிசேஷம் வரலாற்றுக்கு ஒப்பனை செய்யவில்லை. ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் தாவீதின் வம்சத்தின் வழியாக இயேசுவை நோக்கிச் சென்றதை இவ்வரிசை அறிவிக்கிறது. அந்த வாக்குத்தத்தம் ஒரு குடும்பத்தின் பெருமைக்காக மட்டுமல்ல; சகல ஜனங்களுக்கும் ஆசீர்வாதம் கிடைப்பதற்காக.
நாமும் வரலாற்றைப் பேசும்போது வெற்றிபெற்றவர்களின் பெயர்களை மட்டும் சொல்ல விரும்புகிறோம். குடும்பத்தின் கடினமான அத்தியாயங்களை மறைக்கிறோம். ஆனால் உண்மையான சாட்சி மனிதத் தவறுகளை நியாயப்படுத்தாமலும், அவற்றால் மனிதர்களின் முழு வாழ்க்கையையும் வரையறுக்காமலும் பேசும். உன் குடும்பத்தின் கதையை அடுத்த தலைமுறைக்குச் சொல்லும்போது சாதனைகளோடு கற்ற பாடங்களையும் பகிர்ந்துகொள். ஒருவர் எங்கிருந்து வந்தார் என்பதைவிட, தேவனுடைய கிருபை அவரை எங்கே நடத்துகிறது என்பதையும் கவனி. மனிதன் மறைக்க நினைத்த கதைகளுக்குள்ளும், தேவன் தமது வாக்குத்தத்தத்தின் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
ஜெபம்: கர்த்தாவே, பிறருடைய வாழ்க்கைக் கதைகளை முன்தீர்ப்பின்றிக் கேட்கும் இதயத்தைத் தாரும். உமது கிருபையின் விசாலத்தை என் நடத்தையில் வெளிப்படுத்தச் செய்தருளும். ஆமென்.
