காலைத் தியானம் – ஜூலை 31, 2021

சகரியா 8: 14- 19       

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்                                              

                             ஆண்டவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு, நாம் அவர்மீது வைத்திருக்கும் அன்பைப் பொறுத்ததல்ல. அவர் நாம் தகுதியில்லாமல் இருக்கும்போதே நம்மீது அன்பு செலுத்துகிறார். ஆனால் அவருக்கு நம்மிடம் சில எதிர்பார்ப்புகள் உண்டு. அவற்றை நம்மிடம் வெளிப்படையாகச் சொல்லுகிறார். அவர் இஸ்ரவேல் மக்களை முதலாவதாக எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார். மீட்டு வந்த பின்னரே, மோசேயின் மூலமாக இஸ்ரவேலருக்குப் பல கற்பனைகளைக் கொடுத்தார். அவ்விதமாகவே, இன்று வாசித்த பகுதியில், தாம் செய்யப்போகும் நன்மைகளைக் குறித்து சொல்லிவிட்டு, மக்கள் செய்யவேண்டிய காரியங்களைக் குறித்து சொல்லுகிறார். உண்மையைப் பேசுங்கள்; சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்ப செயல்படுங்கள்; பிறருக்கு விரோதமாய் உங்கள் இருதயத்தில்கூட தீங்கு நினையாதீர்கள் என்று அவர் சொல்லுவதைக் கைக்கொண்டால், நாம் பிறருக்கு விரோதமாகச் செய்யக்கூடிய (களவு, கொலை, விபசாரம், இச்சை போன்ற) எல்லா பாவங்களும் தவிர்க்கப்பட்டுவிடும். உனக்காகத் தம் உயிரையே கொடுத்து உன்னை மீட்டுக் கொண்ட உன் ஆண்டவர் உன்னிடத்தில் எதிர்பார்க்கும் இவற்றைக் கைக்கொள்ளாமல் இருக்க நீ என்ன சாக்குபோக்கு சொல்லமுடியும்?                                     

ஜெபம்:

ஆண்டவரே, இவ்வுலகின் சிற்றின்பங்கள் என்னை உம்மிடமிருந்து பிரித்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.