செவ்வாய் மங்கிய மகா ஞானம்!
02-06-2026
1 இராஜாக்கள் 11:1–13
சரிந்த ஞானச் சிகரம்! ஆசீர்வாதத்தின் உச்சியிலிருந்த அரசனின் வீழ்ச்சி ஒரே இரவில் நிகழவில்லை. அவனது சறுக்கலின் சூட்சுமம் நம் கண்முன்னே படிப்படியாக அரங்கேறுகிறது. உலகை வென்றவன், முதலில் சத்துருக்களோடு சிறு சமரசம் செய்தான்; அங்கே தொடங்கியது வீழ்ச்சி! தென்னாட்டு அரசியையே தன் அறிவால் திகைக்க வைத்தவன், அந்த ஞானத்தைத் தந்த தேவன் மீதான வியப்பை இழந்து, “எல்லாம் மாயை” என்று புலம்பினான். “எல்லாக் காவலோடும் இருதயத்தைக் காத்துக்கொள்” என்று அகிலத்திற்கே உபதேசித்தவன், தன் சொந்த உள்ளத்தின் கோட்டைக் கதவுகளைச் சத்துருவுக்கு அகலத் திறந்துவிட்டான். பகை தேசத்தால் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை, அந்தப்புரத்து அந்நிய மாதரின் வஞ்சகம் எளிதாய் மாய்த்தது! யெகோவாவுக்குப் பொன்மாளிகை கட்டிய அதே கரங்கள், இப்போது அருவருப்பான விக்கிரகங்களுக்கு மேடைகளைச் செதுக்குகின்றன! கிபியோனில் ‘சிறுபிள்ளையாய்’ முழுமையாய்ச் சரணடைந்த இருதயம், இப்போது துண்டுதுண்டாய் சிதறிக் கிடக்கிறது. ஒருவேளை நீயும் வீழ்ச்சியின் பாதையில் நிற்பதாக உணர்ந்தால், இதோ உனக்கொரு நற்செய்தி: சிதறுண்ட உனது இருதயத்தை இயேசு கிறிஸ்துவிடம் நேர்மையாய் ஒப்புக்கொடு; அவர் தமது கல்வாரி இரத்தத்தால் அதைத் தம்முடைய நித்திய ஆலயமாக மாற்றி, உன்னை என்றென்றும் அரணாய்க் காப்பார்!
ஜெபம்: கர்த்தாவே, உமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தி, என்னை என்றென்றும் உமது நித்திய ஆலயமாகக் காத்தருளும். ஆமென்.
