காலைத் தியானம் – ஜூன் 05, 2026

வெள்ளி                            சூழ்நிலைகள் புரியாதபோதிலும்!

05-06-2026

1 இராஜாக்கள் 12:16–24

ஓய்ந்தது உருவிய வாள்! சிதறிய சாம்ராஜ்யத்தை வாள் முனையில் இணைக்கத் துடிக்கிறான் ரெகொபெயாம். எருசலேமில் போர் முரசு அதிர்கிறது; லட்சத்து எண்பதினாயிரம் பராக்கிரமசாலிகள் போர்க்கோலம் பூண்டு அணிவகுத்து நிற்கின்றனர். தன் முட்டாள்தனத்தால் இழந்ததை, தன் புயபலத்தால் மீட்டுவிடலாம் என்பது அவனது செருக்கு. ஆனால், பாயத் தயாரான அந்த மாபெரும் படையின் முன்னே ஒரு சாதாரண தீர்க்கதரிசி வந்து நிற்கிறான். “யுத்தம் பண்ணவேண்டாம்” என்று சர்வவல்லவரின் கட்டளையை உரைக்கிறான். என்னவொரு ஆச்சரியம்! நேற்று முதியவர்களின் நல்வார்த்தையைத் துச்சமாக மதித்த முரட்டு அரசன், இன்று தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, படைகளைத் திரும்ப அழைக்கிறான். நாமும் பல நேரங்களில் இழந்ததைச் சொந்த பலத்தால் மீட்க வீணாகப் போராடுகிறோம். சில இழப்புகளும் தோல்விகளும் தேவன் தம்முடைய மாபெரும் நித்திய திட்டத்திற்காக அனுமதிக்கும் திருப்புமுனைகளே! மனிதக் கண்களுக்கு இது பேரிழப்பாகத் தெரியலாம்; ஆனால், புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளிலும் தேவனுடைய சர்வஞானத்தை முழுமையாய் நம்புவதே மெய்யான விசுவாசம். மாம்ச பலத்தால் போராடுவதை நிறுத்திவிட்டு, உடைந்த உன் சூழ்நிலைகளை உன்னதரின் கரங்களில் சமர்ப்பித்தால், அவர் அந்த இழப்புகளையும் தமது மகத்தான திட்டத்தின் கருவியாக நேர்த்தியாய் உருமாற்றுவார்!

ஜெபம்: சர்வவல்லவரே, நீர் அனுமதிக்கும் சில இழப்புகளின் காரணம் இப்போது எனக்குப் புரியாதபோதும் உம்மை நான் முழுமையாக நம்புகிறேன். உம் சர்வ ஞானத்தை நான் நம்புகிறேன். என் சூழ்நிலையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை உமது நித்தியத் திட்டத்தில் நேர்த்தியாய் வழிநடத்தியருளும். ஆமென்.