ஞாயிறு அகந்தையின் முற்றுகை!
28-06-2026
1 இராஜாக்கள் 20:1–25
அகந்தையின் முற்றுகை! முப்பத்திரண்டு ராஜாக்களோடு சமாரியாவை முற்றுகையிடுகிறான் சீரிய மன்னன் பெனதாத். “உன் பொன், பொருள், மனைவியர் எல்லாம் என்னுடையவை” என்று அவன் கொக்கரிக்க, மரண பயத்தில் நடுங்கும் ஆகாப், சத்துருவோடு சமரசம் செய்து எல்லாவற்றையும் தாரைவார்க்கச் சம்மதிக்கிறான். ஆனால், பிசாசின் பசி ஒரு சிறு சமரசத்தால் ஒருக்காலும் தீராது! அவன் உன்னுடைய முழு ஆத்துமாவையும் சூறையாடவே துடிப்பான். சத்துருவின் கூடாரத்தில் போதை தலைக்கேற, ஆகாபின் அரண்மனைக்குள் சர்வவல்லவரின் தீர்க்கதரிசி நுழைகிறான்! பாகாலுக்குப் பலிபீடம் கட்டித் தேவனை நிந்தித்த அதே கொடிய ஆகாபுக்கு, கர்த்தர் இன்று நிபந்தனையற்ற வெற்றியை வாக்களிக்கிறார். ஏன்? “நானே கர்த்தர் என்று நீ அறியும்படிக்கு” (வசனம் 13) என்கிறது சரித்திரம். தன்னை வெறுத்த அரசனின் தேசத்தைக் காக்க, சிருஷ்டிகரே வலிய வந்து கிருபையின் கரத்தை நீட்டுகிறார். இதுவே தேவனுடைய இதயத்தின் ஏக்கம்! நீ எவ்வளவு தூரம் தேவனை விட்டு விலகிப் போயிருந்தாலும், உன்னை சத்துருவின் பிடியிலிருந்து தப்புவித்து, தமது நித்திய அன்பால் மீண்டுமாய் அரவணைக்க இயேசு கிறிஸ்து இன்றும் காத்துக்கொண்டிருக்கிறார்!
ஜெபம்: கர்த்தாவே, என்னை வலிய வந்து மீட்கும் உமது ஈடில்லா அன்பிற்காக நன்றி. உலகத்தின் வஞ்சகங்களோடு எவ்விதச் சமரசமும் செய்யாமல், உமது கல்வாரிக் கிருபையின் பாதுகாப்பில் நான் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். ஆமென்.
