காலைத் தியானம் – ஜூன் 15, 2026

திங்கள்                         செல்வத்தால் வென்ற விரோதம்!

15-06-2026

1 இராஜாக்கள் 15:16–24

இஸ்ரவேலின் அரசன் பாஷா யூதாவின் எல்லையை ஆக்கிரமித்து, ராமாவைக் கோட்டையாகக் கட்டத் தொடங்குகிறான். முப்பத்தாறு ஆண்டுகளாக தேவனை மட்டுமே நம்பி மாபெரும் பராக்கிரமக் காரியங்களைச் செய்த ஆசா, இப்போது பயத்தின் பிடிக்குள் சிக்குகிறான். தேவனிடம் மண்டியிடுவதற்குப் பதிலாக, அவன் கைகள் தேவாலயத்தின் பொக்கிஷங்களை நோக்கி நீளுகின்றன! கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் அள்ளி, சீரியாவின் புறஜாதி மன்னனான பெனதாத்திற்கு லஞ்சமாக அனுப்புகிறான். என்னவொரு அவலம்! பத்து லட்சம் எத்தியோப்பியரைத் தன் ஜெபத்தால் வீழ்த்தியவன், இப்போது ஒரு சிறிய சத்துருவைக் கண்டு, தேவனுக்குரிய காணிக்கைகளை விற்று உலகத்தின் துணையை விலைக்கு வாங்குகிறான்! பிரச்சனை பெரிதாகும்போது விசுவாசத்தில் நின்ற நாம், பல நேரங்களில் போராட்டம் நீளும்போது சோர்ந்துபோய் ‘உலகத்து குறுக்குவழிகளை’ நாடுகிறோம். பிரச்சனை பெரிதோ சிறிதோ, உன்னை விடுவிக்கும் வல்லமை சிரியாவின் அரசனிலும் இல்லை, உன் கையில் உள்ள பணத்திலும் இல்லை; அது தேவனுடைய கரங்களில் மட்டுமே உள்ளது. 

ஜெபம்: சர்வவல்லவரே, என் விசுவாசத்தை உம்மீது மட்டுமே வைக்கிறேன். எப்பேர்ப்பட்ட சத்துருவையும் வெல்ல எனக்குக்  கிருபை தாரும். ஆமென்.