திங்கள் சீறும் சிங்கத்தின் குகை!
22-06-2026
1 இராஜாக்கள் 18:1-19
வறண்ட தேசத்தில் சந்திப்பு! மூன்றரை ஆண்டுகளாகத் தேடப்படும் மாபெரும் ‘குற்றவாளி’ எலியா! அவனது சிரம் கொய்யத் தேசமெங்கும் வலைவீசி சலித்திருக்கிறான் அத்தேசத்து ராஜா ஆகாப். ஆனால், தேடப்பட்ட தீர்க்கதரிசியோ நேரடியாகச் சீறும் சிங்கத்தின் குகைக்குள் எந்தப் பயமுமின்றி நுழைகிறான்! “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா?” என்று அதிகாரத் திமிரில் சீறுகிறான் அரசன். மரணத்தின் விளிம்பில் நிற்கும் எலியா நடுங்கி மண்டியிடவில்லை; மாறாக, “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நானல்ல; நீயும் உன் தகப்பன் வீட்டாருமே!” என்று மன்னனின் முகத்தில் அறைகிறான்! வேட்டையாடும் அரசனின் முன்னே, வேட்டையாடப்படும் ஒருவன் காட்டும் இந்த அசாத்தியத் துணிச்சல் எங்கிருந்து வந்தது? அவனது கண்கள் பூமிக்குரிய அரியணையை அல்ல; தன்னை அழைத்த சர்வவல்லவரின் சிம்மாசனத்தையே நோக்கியிருந்தன! உனக்கு விரோதமாய் உலகத்தின் அதிகாரங்களும், மரண இருளின் சூழ்நிலைகளும் இன்று சீறி எழலாம். ஆனால், தேவன் உன் பட்சத்திலிருந்தால் உனக்கு விரோதமாய் நிற்பவன் யார்? உள்ளத்தை அரிக்கும் மனித பயத்தை இன்றே உதறித்தள்ளு! சர்வவல்லவர் உன் பட்சம் இருக்கிறார். எப்பேர்ப்பட்ட சத்துருவின் கோட்டைக்குள்ளும் நீ கம்பீரமாக நுழைந்து வெற்றியின் கொடியை நாட்டலாம்!
ஜெபம்: சர்வவல்லவரே, நீர் என் பட்சத்தில் இருக்கிறீர் என்ற வாக்குத்தத்தத்திற்காய் நன்றி. என் சூழ்நிலையை எதிர்கொள்ள எவ்வித மனித பயமுமின்றி உமக்காக தைரியமாக எழுந்து நிற்க எனக்குப் பெலன் தாரும். ஆமென்.
