காலைத் தியானம் – ஜூன் 18, 2026

வியாழன்                            துணிகரத்தின் விலை!

18-06-2026

1 இராஜாக்கள் 16:21–34

இஸ்ரவேலின் வரலாற்றில் இதுவரை கண்டிராத இருண்ட சகாப்தத்தை ஓம்ரியும் அவன் மகன் ஆகாபும் தொடங்கி வைக்கிறார்கள். தேவனுக்கு முன்பாக முந்தைய அரசர்கள் அனைவரையும் விட ஆகாப் மிகக் கொடிய பாவங்களைச் செய்கிறான். பாகால் வழிபாட்டைத் தேசத்தின் அதிகாரப்பூர்வமான மார்க்கமாக்குகிறான். இந்த மகா இருளின் உச்சக்கட்டமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவன் யோசுவா மூலமாகக் கொடுத்த எச்சரிப்பை (யோசுவா 6:26) அப்பட்டமாக மீறி, ஏயேல் என்பவன் எரிகோவைக் கட்டியெழுப்புகிறான்! தேவனுடைய எச்சரிப்பையும் சாபத்தையும் துச்சமாக மதித்து எரிகோவைக் கட்டியதால், ஏயேல் தன் மூத்த மகனையும் இளைய மகனையும் பலிகொடுக்க நேரிடுகிறது. என்னவொரு பயங்கரமான விலை! தேவனுடைய வார்த்தை காலாவதியாகிவிட்டது என்று நினைத்து, உலகம் தரும் துணிச்சலோடு மனிதன் தன் சொந்த சாம்ராஜ்யத்தைக் கட்ட முற்படும்போது, விலைமதிக்க முடியாத தன் சொந்த ஆத்துமாவையே பலியிடுகிறான். தேவனுடைய வார்த்தை என்றைக்கும் மாறாதது; அது உயிரோடிருக்கிறது. அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் நீ கட்டியெழுப்பும் எந்த அஸ்திபாரமும் முடிவில் மரணத்தையே தழுவும். தேவனுடைய கட்டளைகளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிந்து, உனது வாழ்வின் அஸ்திபாரத்தை இயேசு கிறிஸ்துவாகிய நித்திய கன்மலையின் மீது மட்டுமே உறுதியாகக் கட்டியெழுப்பு!

ஜெபம்: அப்பா, உம்மில் என் அஸ்திபாரம் நிலைத்திருக்க நான் விரும்புகிறேன். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை உம் வல்ல ஆவியால் எனக்கு அனுதினமும் கற்றுத் தாரும். உம்முடைய நித்திய வழியில் நடக்கக் கிருபை செய்தருளும். ஆமென்.