ஞாயிறு சாம்பலான பலிபீடம்!
07-06-2026
1 இராஜாக்கள் 13:1–10
அதிரவைக்கும் அசரீரி! ‘தேவனுடைய இல்லம்’ என்று அழைக்கப்பட்ட பெத்தேலில், இன்று விக்கிரக ஆராதனை தலைவிரித்தாடுகிறது. அதிகாரத்தின் அந்த மையத்தில், யூதாவிலிருந்து வந்த ஒரு தேவ மனிதன் எந்தப் பயமுமின்றிப் பிரவேசிக்கிறான். அவன் அரசனைப் பார்த்து பேசவில்லை; மாறாகக் கல்லால் கட்டப்பட்ட அந்த உயிரற்ற பலிபீடத்தைப் பார்த்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை முழங்குகிறான்! அடுத்த நொடி, அந்த போலி பலிபீடம் சுக்குநூறாக வெடித்துச் சிதறுகிறது; தீர்க்கதரிசிக்குக் கேடு நினைத்து நீண்ட அரசனின் கரம் விறைத்து பட்டுப்போகிறது! வார்த்தையினாலே அண்ட சராசரங்களைப் படைத்த சர்வவல்லவருக்கு, மனிதனின் போலி அரண்களைத் தகர்ப்பது மிகவும் லேசான காரியம். ஆனால், இந்த வரலாற்று சம்பவம் அரசனின் வீழ்ச்சியோடு முடிந்துவிடவில்லை! தன் கரம் மீள அரசன் மன்றாடியபோது, தேவமனிதன் ஜெபிக்கிறான்; பட்டுப்போன கரம் முன்போலவே மீண்டுமாய் உயிர்பெறுகிறது. ஆ! தேவனுடைய கிருபை எத்துணை பிரம்மாண்டமானது! அவர் தண்டிப்பதில் தாமதமும், ஆசீர்வதிப்பதில் தீவிரமும் உள்ளவர். நீ எவ்வளவு தூரம் தேவனை விட்டு விலகிப் போயிருந்தாலும் சரி, கரம் விரித்துக் காத்திருக்கும் கர்த்தரை நோக்கி இன்றே திரும்பு; அந்த ஈடில்லா அன்பு உன்னை அரவணைத்து முற்றுமாய்க் குணமாக்கும்!
ஜெபம்: சர்வவல்லவரே, உமது வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, உமது சிலுவையின் நிழலில் நான் முழுமையான தஞ்சத்தைத் தேடுகிறேன். என்னை அரவணைக்கக் காத்திருக்கும் உமது அளவற்ற கிருபை என்னை என்றும் தாங்கட்டும். ஆமென்.
