காலைத் தியானம் – ஜூன் 06, 2026

சனி                              பயத்தில் உதித்த பலிபீடம்!

06-06-2026

1 இராஜாக்கள் 12:25–33

அரியணையில் நடுக்கம்! தேவன் கிழித்துக்கொடுத்த பத்து கோத்திரங்களும் யெரொபெயாமின் வசமாகின்றன. ரெகொபெயாமை விட அவனுடைய பங்கு ஐந்து மடங்கு அதிகம்! ஆனால், அந்தப் பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்தவனோ தாழ்வு மனப்பான்மையால், பாதுகாப்பற்ற உணர்வால் (insecurity) நடுங்குகிறான். தன்னை ராஜாவாக்கிய சர்வவல்லவரை விசுவாசிக்காமல், தன் மகுடம் எங்கே பறிபோய்விடுமோ என்ற மரண பயத்தில் அவனது சொந்த புத்தி குறுக்குவழியைத் தேடுகிறது. ஜனங்கள் எருசலேம் தேவாலயத்திற்குச் சென்றால் தன் பதவி பறிபோகும் என்று அஞ்சி, இரண்டு பொற்கன்றுகளை வடிக்கிறான். என்னவொரு அவலம்! விலையேறப்பெற்ற ராஜ்யத்தை இலவசமாக அளித்த ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு, உயிரற்ற உலோகத்திடம் தன் பாதுகாப்பைத் தேடுகிறான். அவனது இந்தப் பாதுகாப்பற்ற உணர்வு (insecurity), ஒட்டுமொத்த தேசத்தையுமே மலிவான ஒரு போலி மார்க்கத்திற்குள் தள்ளுகிறது. தேவன் உன்னை ஒரு பொறுப்பிற்கு அழைக்கும்போது, அதனை நிறைவேற்ற நீ உன் சொந்த தந்திரங்களை நாட வேண்டியதில்லை. உள்ளத்தை அரிக்கும் அந்த பாதுகாப்பற்ற உணர்வை முற்றுமாய் உதறிவிட்டு, உன்னை அழைத்தவரின் பலத்தில் வேரூன்றித் தைரியமாக எழுந்து நில்; தேவனுடைய அழைப்பே உன்னை என்றென்றும் அசைக்கமுடியாத அரணாய்க் காக்கும்!

ஜெபம்: இயேசுவே, நீர் எனக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களை என் சொந்த தந்திரங்களால் காக்கும்படி என்னை உந்தித் தள்ளும் பயத்தை என்னைவிட்டு அகற்றியருளும். எந்த insecurityயும் இன்றி, நீர் தந்த அழைப்பில் தைரியமாக வேரூன்றி நிற்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்