புதன் ஏழு நாள் மகுடம்!
17-06-2026
1 இராஜாக்கள் 16:8–20
இஸ்ரவேலின் அரசன் ஏலா குடிபோதையில் கிடக்கிறான். அவனது சொந்தப் படைத்தளபதி சிம்ரி, வஞ்சகமாய் வாளை உருவி தன் எஜமானனை வீழ்த்துகிறான். ரத்தக்களறியின் மூலம் சிம்மாசனத்தை அபகரிக்கத் துணிந்த சிம்ரிக்குக் கிடைத்தது என்னவோ வெறும் ஏழு நாள் அரசாட்சிதான்! ஓம்ரியின் படைகள் முற்றுகையிட, தப்ப வழியின்றித் தான் ஆசைப்பட்ட அதே அரண்மனைக்குத் தீ வைத்து அதிலேயே எரிந்து சாம்பலாகிறான். ஒரு சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற செய்த மகா பாதகம், வெறும் ஒரு வாரத்தில் அவனையே சுட்டெரித்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஏழு நாட்களுக்குள் அவன் ‘யெரொபெயாமின் பாவங்களில் நடந்தான்’ என்று வேதம் பதிவு செய்கிறது! ஒரு வாரத்திற்குள் எப்படி அவன் புதிய விக்கிரகங்களைச் செய்திருக்க முடியும்? அவன் செய்யவில்லை; மாறாக, தன்னைச் சுற்றியிருந்த தேசத்தின் பாவக் கலாச்சாரத்தை அவன் ஏற்கனவே முழுமையாக சுவாசித்து, அதைத் தன் சொந்தமாக்கியிருந்தான்! நீ வாழும் உலகத்தின் கலாச்சாரம் உனக்குத் தெரியாமலேயே உன் நெஞ்சில் விக்கிரகங்களை எழுப்பிவிடும். உலகத்தின் நச்சுக்காற்றைச் சுவாசிப்பதைத் தவிர்த்துவிட்டு, தேவ வார்த்தையால் அனுதினமும் உன் மனதைப் புதிதாக்கிக் கொள் (ரோமர் 12:2); அதுவே உன்னை அழிவிலிருந்து காக்கும் மெய்யான அரண்!
ஜெபம்: ஆவியானவரே, இந்த உலகத்தின் பாவக் கலாச்சாரம் என் இருதயத்தை ஆட்கொள்ளாதபடி என்னைக் காத்தருளும். அனுதினமும் உமது வார்த்தையினால் என் மனம் புதிதாகி, நான் மறுரூபமாகும்படி என்னை உம் கையில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.
