வியாழன் வெண்கலப் பரிசைகள்
11-06-2026
2 நாளாகமம் 12:1–16
பறிபோன பொன் பரிசைகள்! சாம்ராஜ்யம் பலப்பட்டவுடன், ரெகொபெயாமின் இதயம் அகந்தையினால் தேவனை விட்டு விலகுகிறது. விளைவு? எகிப்திய மன்னன் சீஷாக் எருசலேமின் மீது படையெடுத்து வருகிறான். உலகமே வியந்து பார்த்த தேவாலயத்தின் கருவூலங்களும், சாலொமோன் செய்த மாபெரும் பொன் பரிசைகளும் சத்துருவின் கைகளில் சூறையாடப்படுகின்றன! எல்லாவற்றையும் பறிகொடுத்த அரசன், தன் மானத்தைக் காக்க ஒரு மலிவான நாடகத்தை அரங்கேற்றுகிறான். இழந்த அந்தப் பொன் பரிசைகளுக்குப் பதிலாக, வெண்கலப் பரிசைகளைச் செய்து காவலாளிகளின் கைகளில் கொடுக்கிறான். பொன்னின் இடத்தில் வெண்கலம்! காண்போருக்கு அது மினுமினுக்கும் ஆயுதம்; ஆனால் அரசனுக்குத் தெரியும் அது மதிப்பு குறைவான போலி என்று! இதுதான் மாம்சத்தின் வீழ்ச்சி. தேவனை விட்டு விலகும்போது, சத்துரு நமது ஆவிக்குரிய பொக்கிஷங்களைக் கொள்ளையடிக்கிறான்; நாமோ, இழப்பை நேர்மையாக ஒப்புக்கொள்ளாமல், மினுமினுக்கும் வெண்கலப் பரிசைகளைப்போல உலகத்தின் போலிப் பெருமைகளைச் சுமந்துகொண்டு திரிகிறோம். உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் உண்மையான பொக்கிஷங்களை இழந்துவிட்டு, வெற்றுப் பெருமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறாயா? இன்றே உன்னைத் தாழ்த்தி இயேசுவிடம் திரும்பு; நீ இழந்த அந்த சுத்தப் பொன்னாகிய உன் ஆத்துமாவை மீண்டும் மீட்டெடுத்து உன்னைத் தம் மகிமையால் அலங்கரிப்பார்!
ஜெபம்: கர்த்தாவே, வெண்கலமான போலித்தனத்தை என்னைவிட்டு அகற்றியருளும். உமது கல்வாரி கிருபையால் என் ஆத்துமாவை மீண்டுமாய் சுத்தப் பொன்னாய் மாற்றி, உமது மகிமையால் என்னை அலங்கரித்தருளும். ஆமென்.
