காலைத் தியானம் – மார்ச் 12, 2026

சங்கீதம் 25:1–22

“வழிகாட்டும் கரம்” 

திசை தெரியாத பயணம். சவுலின் கோபத்திலிருந்து தப்பிக்க, தாவீது தன் பெற்றோரை மோவாப் தேசத்தில் கொண்டுபோய் விட்ட நேரம் அது (1 சாமுவேல் 22:3-4). எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. “அடுத்து எங்கே போவது? என்ன செய்வது?” என்று திசை தெரியாமல் நின்ற அந்தச் சந்தர்ப்பத்தில் இப்பாடல் பிறந்திருக்கக்கூடும். 

புதிய ஊருக்குப் போகும்போது வழி தெரியாமல் தவித்திருக்கிறீர்களா? ‘கூகுள் மேப்’ இல்லாத காலத்தில், வழிப்போக்கர்களிடம் “எந்தப் பக்கம் போவது?” என்று கேட்போம். தாவீது அதைத்தான் செய்கிறான். “உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்” என்று அவன் கேட்பது மனிதர்களிடம் அல்ல; வானத்தின் தேவனிடம்! ஒரு சிறிய குழந்தை, தகப்பனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும்போது, அது வழி தவறுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தகப்பன் இழுக்கும் திசையில் அது செல்லும். தாவீது அத்தகைய குழந்தையைப் போல தேவனுடைய கரத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தான். இதுதான் வழி தவறிய பயணிகளுக்குத் தேவன் தரும் இரகசியம். பாதையைப் பார்க்காதீர்கள்; வழிகாட்டியைப் பாருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லவரே, வாழ்க்கைப் பாதையில் திசை தெரியாமல் நிற்கும் எனக்கு, உமது வழிகளைப் போதித்தருளும். என் சுயபுத்தியின் மேல் சாயாமல், உம் கரம் பிடித்து என்னை நடக்கச் செய்தருளும். ஆமென்.