காலைத் தியானம் – மார்ச் 05, 2026

சங்கீதம் 58:1–11

“நீதி உறங்கவில்லை” 

தாவீது சிம்மாசனத்தை நெருங்க முடியாமல், சவுலால் அநியாயமாக விரட்டப்பட்ட காலம். அன்று கூடின நியாயசங்கம் (சவுலின் ஆலோசகர்கள்) நியாயத்தைப் பேசவில்லை; அநியாயத்தை எடை போட்டார்கள். பாம்பின் காதுகளைப் போல அவர்கள் செவிடாகிவிட்டார்கள். இதைப் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனுக்கு, “கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்?” என்ற கோபம் வருவது இயல்பு. தாவீதும் அந்தக் கோபத்தை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவன் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்யவில்லை; அநியாயக்காரரின் “பற்களைத் தகர்த்துப்போடும்” என்று ஜெபிக்கிறான். 

சிங்கத்திற்குப் பல் போனால் பலம் போய்விடும்; பாம்புக்கு பல் உடைந்து போனால் விஷம் போய்விடும். தாவீது எதிரிகளின் உயிரைக் கேட்கவில்லை; அவர்கள் செய்யும் தீமையின் பலத்தை முறிக்கும்படி கேட்கிறான். அநீதி எவ்வளவு பெரிதாகத் தெரிந்தாலும், அது வெயிலில் கரையும் நத்தையைப் போன்றதுதான். அது நிரந்தரம் அல்ல. இறுதியில் ஒரு நாள் வரும். அப்போது உலகம் சொல்லும்: “மெய்யாகவே நீதிமானுக்குப் பலன் உண்டு; மெய்யாகவே பூமியில் நியாயந்தீர்க்கிற தேவன் ஒருவர் இருக்கிறார்”. அநீதியைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள். கர்த்தருடைய கடிகாரம் மெதுவாக ஓடுவதைப் போலத் தோன்றலாம்; ஆனால் அது மிகச் சரியாக ஓடுகிறது.

ஜெபம்:

தேவனே, உமது நீதி என்றும் நிலைநிற்கும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். என்னைச் சுற்றிலும் அநீதி பெருகுவதைக் கண்டு நான் சோர்ந்து போகாதபடி என் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும்.  ஆமென்.