காலைத் தியானம் – மார்ச் 10, 2026

சங்கீதம் 57:1–11

“சிறகுகளின் நிழலில்…” 

சவுலுக்குத் தப்பி ஓடி, தாவீது ஒரு குகைக்குள்  பதுங்கியிருந்த தருணம். வெளியே சவுலின் படை; உள்ளே மரண பயம். அந்தப் பதற்றமான சூழலில், தாவீது ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுகொண்டான். அது குகையின் பாறை இடுக்கு அல்ல; கர்த்தரின் “செட்டைகளின் நிழல்”. 

வானத்தில் கழுகு வட்டமிடும்போது, கோழிக் குஞ்சுகள் தாய் கோழியின் சிறகுகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளுமே, அதுபோல தாவீது தேவனிடம் ஓடுகிறான். இங்கே ஒரு நுட்பமான அழகைக் கவனியுங்கள்: சிறகுகளுக்குள் இருக்கும் குஞ்சு, வெளியே வட்டமிடும் கழுகைப் பார்க்காது; தாயின் இதயத்துடிப்பை மட்டுமே கேட்கும். தாவீதும் அப்படித்தான்! வெளியே சவுலின் கர்ஜனை கேட்டாலும், உள்ளே தேவனின் இதயத்துடிப்பை உணர்ந்து கொண்டிருந்தான். பிரச்சனைகளின் மத்தியில் இருக்கும் பிள்ளையே, கர்த்தரின் சிறகுகளின் நிழலில் இளைப்பாறுவதே மெய்யான சமாதானம். புயல் வெளியே வீசலாம்; ஆனால் சிறகுகளுக்குள் என்றும் அமைதி நிலவும். 

ஜெபம்:

கர்த்தாவே, இத்தனை நூற்றாண்டுகளாய் இப்பாடல்களைப் பாதுகாத்து, ஆபத்து காலத்தில் நான் எங்கே ஓட வேண்டும் என்று எனக்குக் கற்றுத்தருவதற்காய் நன்றி. நான் உமது செட்டைகளின் நிழலில் வந்து தஞ்சம் புகுகிறேன்; நீரே என் அடைக்கலமாயிரும். ஆமென்.