அன்பான நண்பர்களே,
காலம் என்னும் நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஓராண்டாக வேதாகம வரலாற்றின் கரையோரம் நாம் நடந்துவருகிறோம். இந்த ஆண்டின் துவக்கத்தில் பெத்லகேமில் ஆடு மேய்த்த தாவீதின் கைகள், இஸ்ரவேலின் செங்கோலைப் பிடித்த வரலாற்றை (1 சாமுவேல்) நாம் கண்டு களித்தோம் அல்லவா? தாவீது சாதாரண அரசன் அல்ல; அவன் “கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவன்”. இந்த லெந்து நாட்களில், அந்த இருதயத்தின் இரகசியத்தை ஆராய்வதே நம் நோக்கம். இம்மாதத் தியானங்கள் ஒவ்வொன்றும், தாவீது அந்தந்த சங்கீதத்தைப் பாடிய வரலாற்றுச் சூழலை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளன. நாம் ஏற்கனவே வாசித்த 1 சாமுவேல் சரித்திரத்தின் வரிசைப்படியே இச்சங்கீதங்களும் தொகுக்கப்பட்டிருக்கிறன.
பத்சேபாள் என்னும் புயல் வீசுவதற்கு முன், தாவீதின் இருதயம் எவ்விதமான பக்தியில் லயித்திருந்தது என்பதை மட்டுமே இப்போது தியானிக்கப் போகிறோம். அந்தச் சோக அத்தியாயமும், அதன்பின் தொடரும் வரலாறும் ஈஸ்டர் பண்டிகைக்குப் பின் தொடரும்.
வாருங்கள், தாவீதின் சுரமண்டலம் எழுப்பிய இசையோடு நம் பயணத்தைத் தொடர்வோம்!
சங்கீதம் 23:1–6
“எனக்குக் குறைவில்லை”
பெத்லகேமின் பசும்புல் மேடுகள். மாலை நேரம். இளம் தாவீது தன் ஆடுகளைப் பட்டியில் சேர்ப்பதற்கு முன், ஒரு பாறை ஓரத்தில் அமர்கிறான். அவன் இன்னும் சிம்மாசனத்தில் ஏறவில்லை; கையில் செங்கோல் இல்லை, ஆடு மேய்க்கும் தடிதான் இருக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்புதான் சாமுவேல் தீர்க்கதரிசி வந்து அவன் தலையில் ஊற்றிய அந்த அபிஷேகத் தைலத்தின் வாசனை இன்னும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.
தன் முன் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளைப் பார்க்கிறான். அவை, நாளைக்கு எங்கே புல் கிடைக்கும், தண்ணீர் எங்கே இருக்கும் என்று கவலைப்படுவதில்லை. ஏன்? “எங்கள் மேய்ப்பன் இருக்கிறான், அவன் பார்த்துக்கொள்வான்” என்ற நிம்மதி! சட்டென்று தாவீதுக்கு ஒரு பொறி தட்டுகிறது. “நானும் இந்த ஆடுகளைப் போலத்தானே? அந்த வானத்தின் தேவன் எனக்கு மேய்ப்பராக இருக்கும்போது, எனக்கு என்ன குறை?” என்று பாடுகிறான். நாமும் நாளை என்ன நடக்குமோ என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, அந்த நல்ல மேய்ப்பனைப் பற்றிக்கொண்டால், மரண இருளின் பள்ளத்தாக்கும் நமக்கு பயம் தராது. நம் எதிரிகள் நம்மைச் சூழ்ந்தாலும், பயப்படத் தேவையில்லை. மேய்ப்பன் அருகில் இருக்கும்போது, நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்.
ஜெபம்:
நல்ல மேய்ப்பரே, ஒரு ஆட்டுக்குட்டி தன் மேய்ப்பனை நம்புவது போல, நான் உம்மை முழுமையாக நம்புகிறேன். உம் சித்தப்படி என்னை என்றும் நடத்தும். ஆமென்.
