காலைத் தியானம் – மார்ச் 17, 2026

சங்கீதம் 101:1–8 

“ராஜாவின் உறுதிமொழி” 

எருசலேம் அரண்மனை. தாவீதின் தலையில் கீரிடம்; கையில் செங்கோல். அவன் இப்போது இஸ்ரவேலின் ராஜா! புதிய அதிகாரம் கிடைத்தால் மனிதன் ஆடுவது வழக்கம். ஆனால் தாவீதோ, சிம்மாசனத்தில் ஏறியவுடன் ஒரு விசித்திரமான பிரமாணத்தை எடுக்கிறான். அதுதான் சங்கீதம் 101.

இன்றைய அரசியல் மேடைகளில் நாம் கேட்கும் வாக்குறுதிகளைப் போன்றதல்ல இது. இது ஒரு தனிமனிதனின் அந்தரங்கச் சுத்திகரிப்பு. கவனித்தீர்களா? அவன் “தேசத்தை உத்தமமாய் ஆளுவேன்” என்று சொல்லவில்லை; “என் வீட்டுக்குள் உத்தம இருதயத்தோடே நடப்பேன்” என்கிறான். பொதுவாழ்வில் புனிதராய் நடிப்பது எளிது; ஆனால் நான்கு சுவர்களுக்குள், யாரும் பார்க்காதபோது நாம் எப்படி இருக்கிறோம் என்பதே உண்மையான வாழ்க்கை. அதற்கும் மேலாக தாவீதின் கண்கள் தேசத்தில் உண்மையுள்ளவர்களையே தேடிக்கொண்டிருந்தன. கோள் சொல்லுகிறவனையும், மேட்டிமையானவனையும் தன் அரண்மனையை விட்டுத் துரத்துவதில் அவன் குறியாக இருந்தான். அதிகாரம் கையில் வந்ததும், தாவீது தன் அறையை மட்டுமல்ல, தன் நட்பு வட்டத்தையும் சுத்திகரித்தான். தீமையை வெறுக்காதவன், நன்மையை நேசிக்க முடியாது. 

ஜெபம்:

பரிசுத்தரே, பொதுவாழ்வில் நான் அணியும் முகமூடிகளைவிட, என் அந்தரங்க வாழ்வின் பரிசுத்தமே முக்கியம் என்று உணருகிறேன். தாவீதைப் போல என் வீட்டுக்குள்ளும் நான் உத்தமமாய் நடக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.