காலைத் தியானம் – மார்ச் 14, 2026

சங்கீதம் 36:1–12 

“இருளும் ஒளியும்” 

தாவீது சவுலுக்குப் பயந்து ஓடும் அகதியாக இருந்த காலம். தன்னைச் சுற்றிலும் மனிதர்கள் எப்படி வேஷம் போடுகிறார்கள் என்பதை தாவீது பார்க்கிறான். நாவில் தேனும், மனதில் விஷமும் கொண்ட மனிதர்களைப் பார்த்து வெறுத்துப்போன நேரத்தில் இப்பாடல் பிறந்திருக்க வேண்டும்.

மனிதனுடைய வஞ்சகத்தைப் பார்க்கும்போது, “உலகமே இவ்வளவுதானா? யாருமே நல்லவர்கள் இல்லையா?” என்ற சலிப்புத் தட்டும். தாவீதுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மனம் சோர்ந்து போன போது தாவீது மனிதனைப் பார்ப்பதை விட்டுவிட்டு, வானத்தைப் பார்த்தான்! கீழே மனிதன் சேற்றைப் போல அற்பமாக இருக்கிறான்; ஆனால் மேலே தேவன் வானத்தைப் போல விசாலமாக இருக்கிறார் (வசனம் 5). மனிதனுடைய துரோகம் ஒரு சிறிய குட்டை என்றால், தேவனுடைய நீதி மகா சமுத்திரம்! இருட்டு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, “ஐயோ இருட்டாக இருக்கிறதே” என்று அழுது கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்த இருளை விரட்ட, தேவனுடைய வெளிச்சத்திற்கு நேராக நம் கண்களை ஏறெடுக்க வேண்டும் (வசனம் 9). உலகம் உங்களை ஏமாற்றும்போது, மனிதர்களைப் பார்க்காதீர்கள்; மகத்துவமான தேவனைப் பாருங்கள்.

ஜெபம்:

தேவனே, மனிதர்களின் வஞ்சகம் என்னைச் சோர்வடையச் செய்கிறது. ஆனால் நான் உமது மாறாத கிருபையை அண்ணாந்து பார்க்கிறேன். என் கவனம் சிதறாமல், என் கண்கள் உம்மீதே நிலைத்திருக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.