சங்கீதம் 7:1–17
“நியாயம் எங்கே? ”
கூஷ் என்னும் விஷமி, தாவீதின் சரித்திரத்தில் அதிகம் பேசப்படாத, ஆனால் அவனுக்கு மிகுந்த வேதனையைத் தந்த நபர். சவுலின் இனத்தவனான இந்த பென்யமீனியன், “தாவீது, சவுல் ராஜாவைக் கொல்ல சதி செய்கிறான்” என்று அபாண்டமான பழியைச் சுமத்தினான். தன் மீது சுமத்தப்பட்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டைக் கேட்டு தாவீது துடித்த தருணத்தில் இப்பாடல் பிறந்திருக்க வேண்டும்.
பொதுவாக, நம் மீது பழிச்சொல் வரும்போது நாம் என்ன செய்வோம்? ஊர் முழுவதிலும் நம் நியாயத்தை நிரூபிக்க முயற்சிப்போம்; அல்லது, பழிக்குப்பழி பேசத் துணிவோம். ஆனால் தாவீது நீதிமன்றத்தை மாற்றினான். பூமிக்குரிய நியாயஸ்தலத்தில் தனக்கு நீதி கிடைக்காது என்று உணர்ந்து, “நீதியுள்ள நியாயாதிபதி” (வசனம் 11) அமர்ந்திருக்கும் பரலோக நீதிமன்றத்தில் தன் வழக்கை தாக்கல் செய்தான். தாவீது நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்: பிறர் நம்மைத் தூற்றும்போது, நாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நம் கேடயம் தேவனிடத்தில் இருக்கிறது (வசனம் 10). குழி வெட்டுகிறவன், தானே அதில் விழுவான் என்பதுதான் இறைநீதி.
ஜெபம்:
நீதியின் தேவனே, என் மேல் வீசப்படும் அபாண்டமான பழிச்சொற்களைக் கேட்டு நான் கலங்காமலும் என் இருதயம் உமக்கு முன் உத்தமமாய் இருக்கவும் எனக்குக் கிருபை தாரும். என் நியாயத்தை உம்மிடம் விட்டுவிடுகிறேன். ஆமென்.
