காலைத் தியானம் – மார்ச் 19, 2026

சங்கீதம் 2:1–12 

“வானத்தில் ஒரு சிரிப்பொலி” 

பூமியில் ஒரே அமளி. தாவீது எருசலேமின் ராஜாவான நேரம். “இவன் வளர்ந்துவிட்டால் நமக்கு ஆபத்து, இவன் ஆட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று சுற்றியுள்ள தேசங்கள் சதித்திட்டம் தீட்டின. இதைப் பார்க்கும்போது ஒரு சாமானிய மனிதனுக்கு நடுக்கம் எடுப்பது இயற்கை. ஆனால், தாவீது அண்ணாந்து வானத்தைப் பார்த்து அவனுக்குக் கிடைத்த வெளிப்பாட்டை இச்சங்கீதத்தில் பாடுகிறான். 

யோசித்துப் பாருங்கள்: ஒரு சிறு எறும்பு, மதயானையை மிதிப்பேன் என்று சவால் விட்டால், யானை கோபப்படாது; சிரிக்கும். சர்வவல்ல தேவனுக்கு முன்பாக இந்த உலகத்தின் சவால்கள் அப்படித்தான். உலகத்தின் கொந்தளிப்பைக் கண்டு கலங்காதீர்கள். எதிரிகள் சத்தம் போடலாம்; ஆனால் முடிவு தேவன் கையில். ஆண்டவர் சிம்மாசனத்தில் இருக்கிறார்; அவர் பயப்படவில்லை, சிரிக்கிறார். ஆண்டவர் பயப்படாதபோது, அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஏன் நடுக்கம்? அவரிடம் அடைக்கலம் புகுவதே நமக்குப் பாதுகாப்பு.

ஜெபம்:

தேவனே, பூமி அதிரும்போதும் உம்முடைய சிம்மாசனம் அசைவதில்லை என்பதை நான் அறிவேன். உலகத்தின் மிரட்டல்களைக் கண்டு நான் சோர்ந்து போகாமல், உமது வெற்றியின் கோணத்தில் எல்லாவற்றையும் பார்க்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.