காலைத் தியானம் – ஜூன் 12, 2026

வெள்ளி                                  வீழாத உடன்படிக்கை!

12-06-2026

2 நாளாகமம் 13:1–22

போர்க்களத்தில் பேரோசை! அபியாவின் சிறு படைக்கு முன்னே, யெரொபெயாமின் எட்டு லட்சம் பராக்கிரமசாலிகள் சமுத்திர அலைகளைப்போல அணிவகுத்து நிற்கின்றனர். யூதாவின் படைகளை முன் பின்னாக வளைத்துக்கொண்டு மரண வலை பின்னப்படுகிறது. எண்ணிக்கை, வியூகம், படைபலம் என அனைத்திலும் யெரொபெயாமின் கையே ஓங்கியிருக்கிறது. ஆனால், எப்ராயீம் மலையின்மேல் நின்றுகொண்டு அபியா முழங்கும் வார்த்தைகள், எதிரியின் ஆயுதங்களை விடக் கூர்மையானவை! அவன் தன் படைபலத்தை நம்பவில்லை; மாறாக, கர்த்தர் தாவீதோடே பண்ணின உடன்படிக்கையை (வசனம் 5) உரக்க அறிக்கை செய்கிறான். பொற்கன்றுகளை நம்பி வந்த மாபெரும் சேனைக்கு முன்னே, தேவனுடைய மாறாத உடன்படிக்கையை மட்டுமே ஆயுதமாக ஏந்துகிறான். விளைவு? தேவனுடைய பலத்த கரத்தால், அந்த எட்டு லட்சம் பேர் கொண்ட மாபெரும் படை ஒரே நாளில் சின்னாபின்னமாக்கப்பட்டு சுருண்டு விழுகிறது! மனித வியூகங்களும் உலகத்தின் பிரம்மாண்டங்களும் உன்னை நாற்புறமும் வளைத்துக்கொண்டு அச்சுறுத்தலாம். ஆனால் சற்றும் கலங்காதே; உன் சொந்த பலத்தை அல்ல, இயேசு கிறிஸ்து தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உன்னோடு செய்துள்ள நித்திய உடன்படிக்கையையே விசுவாசத்தோடு அறிக்கை செய். அந்த உடன்படிக்கையின் வல்லமை உனக்கு விரோதமாய் எழும்பும் எந்தச் சத்துருவின் வியூகத்தையும் தவிடுபொடியாக்கும்!

ஜெபம்: சர்வவல்லவரே, கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அடைப்பட்டுப் போனாலும் உம்மை அண்ணாந்து பார்க்கும் மேல்திசை என்றும் எனக்காகத் திறந்திருக்கிறது. என் கூக்குரலுக்கு நீர் செவிசாய்த்து, என்னை வெற்றியின் பாதையில் வழிநடத்துகிறபடியால் உமக்கே ஸ்தோத்திரம். ஆமென்.