காலைத் தியானம் – ஏப்ரல் 11, 2026

சனி                    வேடம் போட்டவள்

11-04-2026

2 சாமுவேல் 14:1–20

மூன்று நீண்ட ஆண்டுகள்! கெசூர் தேசத்தில் நாடோடியாய் அப்சலோம்; எருசலேம் அரண்மனையில் ஏக்கத்துடன் தாவீது. மகனைப் பார்க்கத் துடிக்கும் தகப்பனுக்கும், நீதியை நிலைநாட்ட வேண்டிய ராஜாவிற்கும் இடையே ஒரு பெரும் போர். இந்த பலவீனத்தை மோப்பம் பிடித்தான் படைத்தளபதி யோவாப். அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி. ராஜாவின் கவலையைத் தீர்க்க அவன் கையில் எடுத்தது ஒரு தந்திரமான வியூகம். தெக்கோவா ஊரிலிருந்து வந்த அந்த ஸ்திரீயும், அவள் சிந்திய கண்ணீரும் ஒரு நேர்த்தியான நாடகம்! துக்கம் கொண்டாடுகிறவள் போல வேடமிட்டு அவள் சொன்ன கதை, தாவீதின் நீதியுணர்ச்சியைச் சீண்டி, அவனது சொந்தத் தீர்ப்பிலேயே அவனைச் சிக்க வைத்தது. “மகனைக் காப்பாற்றுவேன்” என்று ராஜா வாக்களித்த மறுகணமே, அவள் தன் முகமூடியைக் கழற்றினாள். இங்கே ஒரு முக்கியமான பாடத்தைக் கவனியுங்கள்: நாத்தான் தீர்க்கதரிசி வந்தபோது தாவீதின் “பாவத்தை” உணரச் செய்தார்; ஆனால் இந்தத் தெக்கோவா ஸ்திரீ தாவீதின் “உணர்ச்சியைத்” தூண்டி அவனை ஒரு சமரசத்திற்குத் தள்ளினாள். நம் வாழ்விலும் சில ஆலோசனைகள் பார்ப்பதற்கு தேவ சித்தம் போலத் தோன்றும்; ஆனால் அவை நம் பலவீனத்தைத் தூண்டி எடுக்க வைக்கப்படும் மனிதத் தந்திரங்களாக இருக்கும். எல்லா ஆலோசனைகளையும் வேதத்தின் ஒளியில் சீர்தூக்கிப் பார்ப்பதே மெய்யான ஞானம்.

ஜெபம்: சர்வஞானியே, மனிதர்கள் என் உணர்ச்சிகளைத் தூண்டி ஆலோசனை சொல்லும்போது, அதைச் சீர்தூக்கிப் பார்க்கும் விவேகத்தை எனக்குத் தாரும். உமது சத்தத்தை மட்டும் நான் பின்பற்றி நடக்க உதவி செய்யும். ஆமென்.