ஞாயிறு முகத்தைக் காணாத மகன்
12-04-2026
2 சாமுவேல் 14:21–33
மூன்று வருட வனவாசம் முடிந்தது. தெக்கோவா ஸ்திரீயின் தந்திரம் பலிக்க, இதோ அப்சலோம் எருசலேம் திரும்புகிறான். ஆனால் இது மகிழ்ச்சியின் சங்கமமா? இல்லை! “அவன் தன் வீட்டுக்குப் போகட்டும், என் முகத்தைக் காண வேண்டாம்” என்ற தாவீதின் ஆணை, எருசலேம் கோட்டைக்குள்ளேயே இன்னுமொரு சிறையை உருவாக்கியது. எருசலேமிற்குள் இருந்தும் அரண்மனைக்குள் நுழைய முடியாத அந்தத் தவிப்பு, அப்சலோமின் உள்ளத்தில் இருந்த கோபத்தை எரிமலையாக்கியது. இரண்டு முழு ஆண்டுகள்! தகப்பனின் ஊரில் இருந்தும் தகப்பனின் முகத்தைப் பார்க்க முடியாத அந்த அவமானம், இறுதியில் யோவாபின் வயலுக்குத் தீ வைக்கும் துணிகரத்திற்கு அவனைத் தள்ளியது. இறுதியில் தாவீது மகனை அழைத்து முத்தமிட்டான்; ஆனால் காலம் கடந்துவிட்டது. அந்தத் தாமதமான அணைப்பு, மகனின் மனதில் ஏற்கனவே கருகிப்போன பாசத்தை மீட்டெடுக்கவில்லை.
நாமும் பல நேரங்களில் தாவீதைப் போலவே நிபந்தனையோடு மன்னிப்பு வழங்குகிறோம். “மன்னித்துவிட்டேன், ஆனால் என் கண்ணில் படாதே” என்று உறவுகளுக்குள் ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவரைக் கட்டுகிறோம். இது தேவனுடைய மன்னிப்பு அல்ல. தேவன் நம்மை மன்னிக்கும்போது, நம் குற்றங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டு, தம் முகத்தின் ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்கிறார். நிபந்தனைகளோடு கூடிய மன்னிப்பு, ஆறாத வடுவாக மாறிப் பெரும் விபரீதத்திற்கே வித்திடும். கல்வாரியின் அன்பு நிபந்தனைகளற்றது.
ஜெபம்: கிருபையுள்ள பிதாவே, நிபந்தனையற்ற மன்னிப்பு என்றால் என்ன என்பதைக் கல்வாரியில் எனக்குக் கற்றுக் கொடுத்தீரே. நானும் என் உறவுகளில் பிறரை முழுமையாக மன்னித்து உம்மைப் போல ஏற்றுக்கொள்ள எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
