திங்கள் திருடப்பட்ட இதயங்கள்
13-04-2026
2 சாமுவேல் 15:1–12
எருசலேம் கோட்டை வாசல். அதிகாலை நேரம். முன்னே ஓடும் ஐம்பது வீரர்கள், அணிவகுக்கும் குதிரைகள் என்று புதியப் பகட்டோடு காட்சியளிக்கிறான் அப்சலோம். அவன் இப்போது வெறும் ராஜகுமாரன் அல்ல; மக்களின் மனோபாவத்தை அறிந்த தந்திரசாலி. வாளைக் கொண்டு அரியணையைப் பிடிப்பதை விட, வஞ்சகப் புன்னகையாலும் போலிப் பரிவாலும் மக்களின் இதயங்களைப் பிடிப்பதே எளிது என்பதை அவன் உணர்ந்திருந்தான். அரசனைக் காண வருபவர்களிடம் தந்திரமாக, தேனொழுகப் பேசி, தன் தகப்பன் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையில் மெல்ல மெல்ல விஷத்தைக் கலந்தான். தன்னை வணங்க வரும் ஏழைகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களைத் தூக்கி அணைத்து முத்தமிட்டான். அது அன்பின் முத்தமல்ல; அதிகாரத்தைப் பறிக்கப் போடப்பட்ட ‘முதலையின் கண்ணீர்’ நாடகம்! கடைசியில் தன் சதிக்கு அவன் பயன்படுத்திய கேடயம், ‘பக்தி’! அதன் பெயர் சொல்லி, எப்ரோனில் கிளர்ச்சியைத் தொடங்கினான். வேடம் போடும் மனிதர்களிடமும், போலிப் புன்னகைகளிடமும் எச்சரிக்கையாயிருங்கள். சாத்தான் கொம்புகளோடும் கோரப்பற்களோடும் வருவதில்லை; அவன் ‘ஒளியின் தூதனாகவே’ கவர்ச்சியாக வருகிறான். நம்மைத் திசைதிருப்ப வரும் முகஸ்துதிகளுக்கு நாம் செவிசாய்த்தால், நம் இருதயம் மெய்யான ராஜாவாகிய கிறிஸ்துவை விட்டுத் திருடப்பட்டுவிடும்.
ஜெபம்: சத்திய ஆவியானவரே, உலகத்தின் பகட்டுக்கும், மனிதர்களின் போலி வார்த்தைகளுக்கும் நான் ஏமாந்து போகாதபடி என் ஆவிக்குரிய கண்களைத் திறந்தருளும். என் இதயம் உம்மீது மட்டும் நிலைத்திருக்கச் செய்யும். ஆமென்.
