2 சாமுவேல் 13:1–22
“அரண்மனைக்குள் ஒரு புயல்”
தாவீதின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது. ஆனால், “பட்டயம் உன் வீட்டை விட்டு விலகாது” என்ற நாத்தானின் தீர்க்கதரிசனம், இதோ ஒரு கருமேகமாக அரண்மனையைச் சூழ்கிறது. தாவீதின் மூத்த மகன் அம்னோன், தன் சகோதரி தாமார் மேல் காமப் பித்து கொண்டு அவளை வஞ்சகமாய்த் தீட்டுப்படுத்துகிறான். இங்கே காமத்தின் விகாரத்தைப் பாருங்கள்! அவளை அடையத் துடித்த அதே அம்னோன், பாவம் முடிந்த மறுகணமே அவளை அதைவிட அதிகமாக வெறுத்துத் துரத்துகிறான். காமம் ஒருபோதும் அன்பாகாது; அது சுயநலத்தின் கோரமுகம். ராஜகுமாரி தாமார் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டு கதறுவது அரண்மனையையே உலுக்குகிறது. செய்தி கேட்ட தாவீது கோபங்கொண்டான்; ஆனால், நீதியை நிலைநாட்டவில்லை. ஏன் இந்த மௌனம்? தன் சொந்தப் பாவத்தின் நிழல் அவன் மனசாட்சியை முடக்கிப்போட்டது. தகப்பனின் தயக்கம், அடுத்த கொடிய பாவத்திற்கு — அப்சலோமின் பழிவாங்கும் கொலைக்கு — வித்திட்டது. பெற்றோர்களே, நம்முடைய அந்தரங்கப் பாவங்கள் நம் சந்ததியை எப்படிக் கவ்விக்கொள்ளும் என்பதற்கு இதுவே ஒரு எச்சரிக்கை.
ஜெபம்:
பரிசுத்த தேவனே, என் அந்தரங்க பாவங்களை மன்னித்து அதன் பிடியிலிருந்து தப்பிக்கக் கிருபை தாரும். என் தவறுகள் என் சந்ததியைப் பாதிக்காதபடி காத்தருளும். எந்தச் சூழ்நிலையிலும் உம் நீதியை நிலைநாட்டும் நேர்மையை எனக்குத் தாரும். ஆமென்.
