காலைத் தியானம் – ஏப்ரல் 03, 2026

சங்கீதம் 22:1–31

“ஏன் என்னைக் கைவிட்டீர்?” 


கல்வாரி மலை. நண்பகல் பன்னிரண்டு மணி. ஆனால் வானத்தில் சூரியனைக் காணவில்லை; எங்கும் காரிருள் சூழ்ந்து கொண்டது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார் மாசற்ற இரட்சகர். தாவீது ராஜா கைவிடப்பட்டதையும் (வசனம் 1), தன் கைகளும் கால்களும் குத்தப்பட்டதையும் (வசனம் 16), தன் வஸ்திரங்கள் சீட்டுப் போட்டு பங்கிடப்பட்டதையும் (வசனம் 18)  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடியிருந்தான். அது அந்த புனித வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் தத்ரூபமாக நிஜமாகிக் கொண்டிருந்தது. தாவீது ஒரு கவிஞனாய்ப் பாடிய வலியை, இயேசு நிஜமாகச் சுமந்து கொண்டிருந்தார். இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனைகளிலேயே உச்சக்கட்ட வேதனை எது தெரியுமா? முள்முடியோ, சாட்டையடியோ அல்ல; உலகத்தின் பாவபாரத்தைச் சுமந்த குமாரன், கைவிடப்பட்டதின் வேதனையை அனுபவித்தது தான்.  இன்று, சிலுவையின் அடியில் சற்று மண்டியிடுவோம். அவர் ஏன் அன்று கைவிடப்பட்டார் தெரியுமா? இனி எந்தக் காலத்திலும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் நாம் “கைவிடப்படவே கூடாது” என்பதற்காகத்தான்! இருள் சூழ்ந்த பாதைகளில் நீங்கள் நடக்கும்போது, “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டாரோ” என்று கலங்காதீர்கள். உங்களுக்கான அந்தத் தண்டனையைத்தான், அவர் அன்று கல்வாரியில் சுமந்து தீர்த்துவிட்டாரே!

ஜெபம்:

அன்பின் பிதாவே, என் பாவங்களினிமித்தம் நான் கைவிடப்படக் கூடாதென்று, உமது ஒரே பேறான குமாரனைச் சிலுவையில் கைவிட்டீரே! அந்த அளவற்ற தியாகத்தை நினைத்து என் நெஞ்சம் கலங்குகிறது. என் வாழ்நாள் முழுவதும் உமது கல்வாரி அன்பின் நிழலிலேயே நான் நிலைத்திருக்க எனக்குக் கிருபை தாரும். ஆமென்.