காலைத் தியானம் – ஏப்ரல் 22, 2026

புதன்                பகட்டை உதறிய பக்தி! 

22-04-2026

2 சாமுவேல் 19:31–43

 அகதியாய் ஓடிவந்த தனக்குப் பந்தி ஆயத்தம் செய்த பர்சிலாவை, சக்கரவர்த்தி தாவீது ஆசையோடு எருசலேமின் “மேலான” வாழ்வை நோக்கி அழைக்கிறார். ஆனால் எண்பது வயதான பர்சிலாவோ, அந்த ராஜ அழைப்பை நாசூக்காக மறுக்கிறார். என்னவொரு ஆச்சரியம்! ராஜாவின் மேஜையில் அமரும் பாக்கியம் கிடைத்தால் யாராவது வேண்டாம் என்பார்களா? ஆனால் பர்சிலா, தன் சொந்த ஊரின் அமைதியையே விரும்பினார். அவருக்கு அரண்மனையின் பதவியோ, பகட்டோ தேவையில்லை. அவர் செய்தது பிரதிபலனை எதிர்பார்த்த வியாபாரம் அல்ல; ஆபத்தில் இருந்த தேவ மனிதனுக்குச் செய்த அன்பின் காணிக்கை.  உலகம் பதவியைத் தேடி அலைகிறது; பலர் தாங்கள் செய்த சிறு உதவிக்காகக் கூட பெரும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் முதிர்ந்த பக்தியோ, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் கொடுத்துவிட்டு, நிம்மதியாகத் தன் கூடாரத்திற்குத் திரும்பும்!

ஜெபம்: ஆண்டவரே, நான் பிறருக்குச் செய்யும் உதவிகளுக்கு உலகத்தின் புகழையோ, மனிதரின் கைம்மாறையோ எதிர்பார்க்காதபடி என் உள்ளத்தைக் காத்துக்கொள்ளும். நீர் தரும் மேலான அங்கீகாரமே எனக்குப் போதுமான வெகுமதியாய் இருக்கட்டும். ஆமென்.