புதன் கட்டாத மாளிகை!
29-04-2026
1 நாளாகமம் 22:1–5
அஸ்தமனத்தின் ஆயத்தம்! எத்தனையோ சாம்ராஜ்யங்களை வீழ்த்திய அந்த மகா பராக்கிரமசாலி, தன் தேவனுக்கு ஒரு ஆலயம் எழுப்பத் துடிக்கிறான். ஆனால், பரலோகம் தடை விதிக்கிறது. உலகையே ஜெயித்தவனால், தன் தேவனுக்காக ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை! தாவீது விரக்தியடையவில்லை; தன் வாரிசு சாலொமோனின் அனுபவமின்மையை உணர்ந்து, அவனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் மலைமலையாகக் குவிக்கிறான். தான் ஒருபோதும் காணப்போகாத ஒரு மகிமைக்காகத் தன் இறுதி மூச்சு வரை வியர்வை சிந்துகிறான்! அடுத்த சந்ததியின் ஆராதனைக்காகத் அஸ்திபாரம் அமைக்கிறான். நீங்கள் காணப்போகாத ஒரு மகிமைக்காக, அடுத்த தலைமுறையின் விசுவாசத்திற்காக இன்று செங்கற்களைச் சுமக்கத் தயாரா? பலன்களை அனுபவிப்பதை விட, பிறருக்காகப் பாதையை ஆயத்தம் செய்வதே மெய்யான மேன்மை!
ஜெபம்: நித்திய தேவனே, நான் காணப்போகாத மகிமைக்காக முழு உள்ளத்தோடு ஆயத்தம் செய்யும் பக்குவத்தை எனக்குத் தந்தருளும். எனக்காக மட்டும் வாழாமல் அடுத்த சந்ததிக்காகவும் உழைக்கும் தியாகத்தை என்னில் ஊற்றும். ஆமென்.
